தலைமுறையின் பயணம்

புகை வண்டி பயணத்தில்
இடை வந்து சேர்ந்த இளைஞன்
உடன் பயணித்த எங்களுக்கோர்
அதிசயப் பொருளானான்..

இடைவிடாமல் பேசி எங்களின்
சிந்தனைக்கு சவாலாக
அடுக்கிப் போனான் கேள்விகளை..

இப்படியே வாழ்கிறீர்களே
எப்படி வாழும் எங்கள் தலைமுறைகள்..
என்பதே அவற்றின் உள்ளடக்கம்..

சாலையில் காவலர் முதல்
பல்வேறு அலுவலகங்கள் வரை
உங்கள் பணியெல்லாம் முடிவுறவே
நீட்டுகிறீர் பணம் லஞ்சமாக..
பல பேரும் நிற்கின்றார் வெளியில் பரிதாபமாக!

ஆங்கிலேயன் போன பின்னும்
அடிமைத் தனம் விட்டுவிடாமல்
நியாயம் மறைத்து அடி வருடி
சுயலாபங்கள் பல காண்கின்றீரே..
அதை பிறரும் செய்ய எதிர்பார்க்கின்றீரே!

சத்தான உணவுமுறை நீங்கள் எல்லாம்
சாப்பிட்டு வளர்ந்த பின்னே எங்களுக்கு
நோய் கூட்டும் புது வகைகள் தருகிறீரே ..
சேமிக்கும் வழக்கத்தை சொல்லித் தராமல்
கண்டபடி செலவு செய்ய விடுகின்றீரே !

இன்னும் சிலர் உங்களிலே எங்கள் முன்னால்
குடிப்பழக்கம் புகைபழக்கம் கைவிடாது
சூதாட்டம் பலவகைகள் அடுத்து வரும்
தலைமுறைக்கு அழியாமல் அப்படியே
கொண்டுசேர்க்கும் விதமாக வாழ்கின்றீரே!

இன்னும் எத்தனையோ இருக்குதிங்கே
குற்றம் சொல்ல வரவில்லை நான்
உங்களை வேண்டுகின்றேன் அவ்வளவுதான்
எங்கள் தலைமுறைகள் வாழ்வதற்கு
உங்கள் வாழ்வு முறை பற்றி சிந்திப்பீரே!

இடையில் அவன் இறங்கிவிட்டான்
இன்னும் என்னென்னவோ சொல்லி சென்று விட்டான்..
...
எங்கள் பயணம் இனிதே தொடர்கிறது!

எழுதியவர் : கருணா (31-Jan-15, 10:43 am)
பார்வை : 375

மேலே