கடவுள் குடித்த கட்டிங் சாயா

மாஸ்டர்!! ஒரு கட்டிங் சாயா..
என்றபடி எதிரிலமர்ந்த கடவுள்
தன் ஒளிவட்டத்தை அணைத்துவிட்டு
பிரார்த்தனை உறையோலைகளை பிரிக்கலானார்
மெலிதும் கனத்ததுமாய்
சிறிதும் பெரிதுமாய்
கசங்கியும் கசங்காமலும் என
பலவாறான உறைகள் குவிந்திருந்தன.
பெரும்பாலான உறைகளில் பெருநாற்றமெடுக்கவே
பிரிக்கத்துவங்கிய கடவுள்
மூக்கை மூடிக்கொண்டார்.
மயிர்கற்றைகள் நிரம்பிய உறைகளில்
மலர்வாடை தேடியவர்
காலியான சில உறைகளை நுகர்ந்து
பணவாசத்தை உணர்ந்து சிரித்தார்.
குருதி நெடியடித்த உறையினின்று உருண்டோடிய
சில ஆட்டுத்தலைகள் மற்றும் கேலிச்சித்திரங்களோடு
மழலைகளின் பிரேதங்களும் இருந்தது கண்டு
மூர்ச்சையாகப்போன கடவுள்முன்
சாயாவை வைத்தான் மாஸ்டர்.
ஆழ நுகர்ந்தபின் சாயாவை
ஓரே மடக்கில் குடித்த கடவுள் புன்னகைத்தபடி சொன்னார்,
“இதுல வேர்வை வாசம் அடிக்குதப்பா,
அதுக்காகவே இன்னொரு சாயா சொல்லலாம்"

எழுதியவர் : ஈ.ரா. (31-Jan-15, 3:36 pm)
பார்வை : 93

மேலே