மௌனமான மனம்

என் மனம் ஒரு பெண்ணோ?!
எண்ணங்கள் எனும் உடைகளை
ஆசைகள் எனும் ஆபரணங்களை,
கனவு எனும் அழகு சாதனங்களை
மாறி, மாறி கலர் கலராக, விதவிதமாக
அணிந்து அழகு பார்ப்பதோடு மட்டுமல்லாமல்
எனது கவனம் வேறெங்கும் சிதறி விடாமல்
நாணம், கோபம், தாபம், இவ்வாறாக
அவளின் வானவில் கோணங்களின்
24*7 நவரச வெளிப்பாடு!
ஆடைகள் அழகு சாதனங்கள்
ஆபரணங்கள் ஏதும் இல்லாமல்
அவளை அவளாக மட்டும் பார்க்க எத்தனித்தேன்!
சேலைகளின் தழுவலில், பொட்டின் ஒட்டுதலில்,
செயின்களின் அரவணைப்பில்
வளையல்களின் பிணைப்பில்
ஒளிந்து மறைந்து இருந்த மனத்தின் மேனியினைக்
கண்ணுற காமுகனாக திரிந்தேன்.
கண்டேன் நிர்வாணத்தின் பரிமாணத்தை;
எண்ண அலைகள், ஆசை, சலனம்
இவை நிறைந்த மனம், ஆழ் சமுத்திரத்தின்
ஆர்ப்பரிக்கும் அலை அரசி!
அந்த ஆழ் கடலோ என்னுள் இயங்கும்
என்னை இயக்கும் இறை.
அதில் மூழ்கினேன்.
இந்த 'நான் ' இல்லாமல்,
உணர்கின்றது, உணரப்படுவது,உணர்வு
என்ற பேதங்கள் இல்லாமல்
அமைதி, சாந்தம், ஆனந்தம்!
மனம் மௌனமானால் மோனமே, தியானமே!
திவ்ய தரிசனமே!

எழுதியவர் : ட்ச்சோம (31-Jan-15, 8:43 pm)
Tanglish : mownamaana manam
பார்வை : 81

மேலே