நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
மலிவாக கிடைக்கும் காற்றென்று மரத்தை வெட்ட முனைந்தீரோ?
--பூச்சிக் கொல்லி நிதம் பொழிந்து பூமி கொன்று பிழைத்தீரோ?
மழைத்துளி எல்லாம் அமிலமானால் அதை ஆயுதம் கொண்டு தடுப்பீரோ?
--பயிர் எல்லாம் நஞ்சானால் அதை பணம் கொண்டு முறிப்பீரோ?
மாதர் அன்று விட்டாள் மண்ணெடுத்து சாபம்
--மண்ணே விடப்போகுதய்யா நம் மீது சாபம்
--மழலைகள் நல்லுணவின்றி தவிக்கப் போகுது பாவம்
எங்கோ பூமி பிளந்தால் என்ன,
என் வீட்டில் பூ பூக்கிறதென்று பூரித்து நின்றீரோ ?
--எழுந்த கடலலைகள் என் வீட்டு
நீச்சல் குளம் நனைக்காமல் போனதென்று இறுமாப்புக் கொண்டீரோ?
சாவைக் கொண்டாட வேண்டுமென்று சந்ததிகளுக்கு
இன்றே சவப்பெட்டி செய்யத் துணிந்து விட்டீரோ?
நெல்லரிசி அழித்து நெகிழி அரிசி விதைப்பீரோ?
பனியின் துளிகளுக்கு பாறை உருவம் தருவீரோ?
வெளிச்சத்தின் சூரியனை வேள்வி எழுப்ப வைப்பீரோ?
எரிகின்ற எதிர்காலம் என் கண் முன்னே நிற்குது
--இயற்கை கொல்லும் எமனெல்லாம் எழுந்தே தான் நிற்குது
நாம் யாரும் மதிக்கவில்லை முன்னவரின் சொல்லையே - அழியும்
--நானிலம் அழுவதைக் கண்டு என் நெஞ்சு பொறுக்குதில்லையே