பட்டினி

(குறிப்பு: இந்த எழுத்துகள் எண்ணம் பகுதியில் எழுதப்பட்டவை)

பாரதி!
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜெகத்தினை அழிக்க சொன்னாய்!

உணவு மட்டுமல்ல எந்தன் மழலைகளுக்கு
வயிறே இல்லை! ஆனால்
நாங்கள் மனிதர்கள்!
தின்று கொழுத்த தொந்தி
குறைய வழிதேடுகிறோம்!

இரைப்பை அமிலம் இவர்களை
தின்று தின்று
இறப்புக்கு அழைத்து செல்கிறது! - ஆனால்
நாங்கள் மனிதர்கள்!
இது பற்றி கவலை எதுவும் இல்லாமல்
இன்பம் தேடி திரிகிறோம்!

பை தூக்கி பள்ளி செல்ல வேண்டிய
பச்சிளம் குழந்தைகள்
பசி தீர்க்க கை ஏந்தி நிற்கின்றன! ஆனால்
நாங்கள் மனிதர்கள்!
இதை பார்த்தும் பார்க்காதது போல்
பல் இளித்து வாழ்கிறோம்!

உடலே உடலை தின்று
எலும்பே எலும்பை தின்று
பசி யன்றி வேறொன்றும்
சிந்தையில் நில்லாமல்
உணவே கனவாய் கொண்டு
தன்னை மண் புசிக்கும்
மரணம் நோக்கி மழலைகள்!
ஆனாலும் நம்பிக்கை!
ஒரு கையளவு சோறு
தனக்கு ஒரு நாள்
வாழ்வு தருமென்று! ஆனால்
நாங்கள் மனிதர்கள்
இதற்கென ஏதும் செய்யாமல்
ஒரு கவிதை மட்டும் எழுதிவிடுவோம்!
ஏன் தெரியுமா?
நாங்கள் சொன்னவுடன்
இந்த ஜெகம் அழிந்து போவும் அளவிற்கு
நாங்கள் நல்ல மனிதர்கள்.

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (3-Feb-15, 5:46 pm)
Tanglish : pattini
பார்வை : 773

மேலே