உலாச்சரம்

மல்லி வாங்க மதுரைக்குச் சென்றிருந்தேன்
மங்கை ஒருத்திமனம் பறித்துச் சென்றாள்
மானினமோ தேனினமோ என்று கேட்டேன்
மாதிணை என்றுசொல்லி மறைந்து போனாள்

மாடு வாங்க மணப்பாறை போயிருந்தேன்
மாதொருத்தி வந்தென்னை மயக்கிப் போட்டாள்
மாடமோ மயிலிறகோ என்று கேட்டேன்
மாடத்து கிளியென்று சொல்லிச் சிரித்தாள்

வீடுவாங்க வியாசர்பாடி வந்து நின்றேன்
வனிதை ஒருத்திவந்து விசாரித்துப் போனாள்
வயல்நாடோ வாழைத் தோப்போ என்றிடவே
வளைதாண்டா வளைகரம் என்று சொன்னாள்

மீன்வாங்க மீஞ்சூர் மார்க்கெட்டுக்கு வந்தேன்
மேனகை ஒருவள்வந்து மோகனம் செய்தாள்
கருவண்டோ கடல்நண்டோ என்று கேட்டேன்
கைக்கு சிக்காத கெழுத்திமீன் என்றாள்

அப்புறமா தெரிந்தது அத்தனையும் ஒருத்தியென்று
அவளைத் தேடி நானலைய அல்லும்தான் அயர்ந்தது
அடடா இதென்ன பொத்தென்று தரைவிழுந்தேன்
அடச்சீ என்சொல்ல எல்லாமே கனவாச்சி . ..

எழுதியவர் : -சுசீந்திரன். (4-Feb-15, 8:14 am)
பார்வை : 85

மேலே