நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் -கவிதை போட்டி

கோயிற் சிலைக்கு குடங்குடமா யூற்றுவதைத்
தாயில்லாப் பிள்ளைக்குத் தாரீரோ ? - பாயில்
பசித்தக் குழவிக்குப் பாலில்லை யென்றால்
கசிந்து பொறுக்குமோ நெஞ்சு .

கணக்கின்றி கைநீட்டிக் கையூட் டுபெறும்
குணங்கெட்டார்க் கண்டால் கொதிக்கும் - பிணத்திடமும்
காசுபணம் கேட்கும் கயவரோ என்றெண்ணிக்
கூசும், பொறுக்காதே நெஞ்சு .

உதிரப்பா லீந்தே உயிர்த்தந் தவளைக்
கதியின்றி கைவிடாமல் காப்பீர் ! - மிதித்தே
முதியோரில் லம்விடும் மூடரைக் கண்டால்
கொதிப்பாய்த் துடிக்குதே நெஞ்சு .

தெருவில் நடக்கும் திருநங்கைக் கண்டால்
அருகில்போய்க் கிண்ட லடிக்கும் - உருவுகண்டே
எள்ளி நகைத்திடும் எத்தரைச் சாத்திட
உள்ளந் துடித்திடு மே !

சொந்தமென்றும் பாராமல் சொத்துக்காய்ச் சண்டையிடும்
பந்துக்கள் சேர்ப்பதும் பாவமே ! -சிந்தையில்
வஞ்சமுடன் வாதிட்டே வாழ்பவர் கண்டிடில்
நெஞ்சம் பொறுக்குதில்லை யே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Feb-15, 12:15 am)
பார்வை : 263

மேலே