தொலைந்த என் அம்மா
என் அம்மா இன்னும் கிடைக்கவில்லை ,
யாரும் தேடும் முயற்சியும் தெரியவில்லை.
நட்டநடு வீதியில் நாலு பேர் போகும் பாதையில்
சுற்றி நின்ற சுற்றம் இருந்தும்
அனாதையாய் கண்ணீருடன்
என் அம்மாவைத் தொலைத்துவிட்டேன்.
சுவரொட்டி அறிவிப்போ
காணவில்லை விளம்பரமோ
சுற்றத்தார் சாட்சியமோ
காவலர் விசாரணையோ
தொலைத்த அவளைத் தருமா?
நான் விடும் கண்ணீரோ
தாங்காத என் வேதனையோ
மறவாத அவள் நினைவோ
குறையாத என் பாசமோ
என் அம்மாவைத் திருப்புமா?
அன்று நான் தொலைத்ததெல்லாம் புதுப்பித்தாள்,
இன்று தொலைந்ததே அவளானால்?