நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி 2015
இன்று நான் அகதியில்லை!
பூக்கள் சிரித்துக் குலுங்கும்
நாட்கள் அழகாய் கழியும்
அழகிய தேசம் எனக்குண்டு
ஆனால் நாளை?...
உழவனின் உழைப்பை
புழுவென்று மதித்தால்
உறுதியாய் இப்படி இருக்காது.
மனதுக்குள்ளிருக்கும்
மதமும் சாதியும்
வீதியில் இறங்கி வேட்டையாடினால்
கண்டிப்பாய் இப்படி இருக்காது
எந்நாட்டுப் பொருளை
ஏளனமாய் நினைத்து
அந்நியன் பாதம் ஆராதித்தால்
நிச்சயம் இப்படி இருக்காது
மண்புழுவின் நன்றி
கொஞ்சமிருந்தாலும்
அகதியில்லை நான்
அழகிய தேசம் எனக்குண்டு!...