என் தமிழச்சி எங்கே …………
சூரியனை எழுப்பி
சூடான நீரில் குளிப்பாட்டி
எருது சாணம் கொண்டு கிருமிகளை
எள்ளளவும் நெருங்கிடாத வண்ணம் விரட்டி
நெடுநேரமாக காத்திருக்கும் எறும்புகளுக்கு
நெல் அரிசி மாவில் உணவு பரிமாறிவிட்டு
எட்டு மடிப்பு சேலையில் ஒய்யாரமாக
ஏழுலூரு கண்ணுப்பட வாழ்ந்த என் தமிழச்சி எங்கே!
வெட்கத்தை நிழலாகக் கொண்டவள்
வேடிக்கைப் பேச்சை வசனமாகக் கொண்டவள்
அழகு என்னும் உடலைக் கொண்டவள்
அளவுள்ள சிரிப்பைக் கொண்டவள்
பட்டு மேனியைக் கொண்டவள்
பதறாத வீரத்தைக் கொண்டவள்
இளசுகளைக் கிறங்கடித்த
இளஞ்சிவப்பு தாவணியணிந்த என் தமிழச்சி எங்கே!
பூ பொட்டு வைத்தவள்
புன்னகையை உதட்டில் வைத்தவள்
பாசத்தை நெஞ்சில் வைத்தவள்
பலத்தை நாவில் வைத்தவள்
பக்குவத்தை சொற்களில் வைத்தவள்
பயத்தை நடத்தையில் வைத்தவள்
பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும்
பச்சத் தமிழச்சி எங்கே!