நெஞ்சு பொறுக்குதில்லையே மண்பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
( மண்பயனுற வேண்டும் கவிதைப் போட்டி )
நெஞ்சு பொறுக்குதில்லையே
பாவலர் கருமலைத்தமிழாழன்
கண்ணகியைத் தெய்வமென வணங்கும் கையால்
கற்பழித்துப் பெண்கள்தம் கழுத்த றுப்பர்
பெண்மையினைத் தெய்வமெனப் போற்றும் வாயால்
பெருந்தொகையைத் தட்சணையாய் மணக்கக் கேட்பர் !
சாதியில்லை எனமேடை முழக்கி விட்டு
சாதிமாறிக் காதலிக்கும் மகளை அடிப்பர்
வீதிநின்று பொதுமைபேசி மறவாய்ச் சென்று
விளைவிப்பர் மதங்களிடைக் கலவ ரத்தை !
நீதிநெறி மன்றத்தில் முழங்கி விட்டு
நிதிவாங்கி நீதியினை முடமாய்ச் செய்வர்
ஏதிலியாய்ப் பெற்றவளை விடுதி சேர்த்து
எழிலாக மனைவியுடன் இல்லம் வாழ்வர் !
வளம்தருவோம் எனவணங்கி வாக்கைப் பெற்று
வளம்சுருட்டி வெளிநாட்டில் மறைத்து வைப்பர்
களவுதனைத் தடுக்கின்ற காவல் காரர்
கள்வரொடு கரம்கோர்த்து சட்டம் விற்பர் !
கடவுள்தம் பெயர்சொல்லி ஆன்மீ கத்தைக்
காமத்தின் கூடாரம் ஆக்கிக் கொல்வர்
அடநெஞ்சு பொறுக்காஇச் செயல்கள் கண்டும்
ஆர்த்தெதிர்க்க மக்களிங்கே துணிவும் இல்லார் !