நெஞ்சுப் பொறுக்குதில்லையே – மண் பயனுறவேண்டும் கவிதைப்போட்டி

மண்சுமக்கும் மழலைக்கூட்டம் மடிநிரப்பும் கயவராட்டம்
...புண்சுமந்த நெஞ்சைக்கொண்டு புதுமைதேடி நாளுமோட்டம்
விண்வியக்கும் கல்விக்கூடம் விடிவதில்லை ஏழைவாழ்வும்
...கண்சிவக்கும் காட்சிக்கண்டு கயமையழிக்க எழுமோகூட்டம் ...

கந்தகத்தின் சூட்டில்நிதமும் வெம்பிமடியும் மழலையுள்ளம்
...குந்தகமாய் கொடியமனிதம் வஞ்சனையால் வந்தநரகம்
மந்தையான மனிதர்க்கூட்டம் மனதைமாற்றி எழுதவேண்டும்
...விந்தையான மனங்களெல்லாம் வீறுகொண்டு எழுதல்வேண்டும்...

வறுமைவிரட்ட வம்சம்விற்கும் கொடுமையெல்லாம் அழியவேண்டும்
...வெறுமைமட்டும் வாழ்வாய்வந்தால் விதியைக்கொன்று நிமிர்தல்வேண்டும்
கறுமைக்கொண்ட நெஞ்சம்சாக மடமையெல்லாம் களையவேண்டும்
...மறுமைவரை வஞ்சம்வைக்கும் மனிதர்மெல்ல மாறவேண்டும்...

மண்கீறி உழுதோம்தினமும் மடையனாகி போனோம்நிதமும்
...விண்ணிடிக்கும் தொழிலின்கூடம் விளைநிலங்கள் அய்யோபாவம்
புண்ணான நெஞ்சம்மாற புதுவிடியல் எழுந்தால்நாதம்
...கண்ணினோரம் விடியல்தேடும் உழவன்வாழ்வும் உயரவேணும்...

இலஞ்சமென்ற பேயோநாளும் வஞ்சம்வைத்து தீமைவிதைக்கும்
...நெஞ்சைக்கீறி இரத்தம்சுவைக்கும் மனிதர்க்கூட்டம் மடிதல்வேண்டும்
நெஞ்சேநீயும் மாறுஅனலாய் பொறுத்ததுபோதும் சீறுதணலாய்
...நஞ்சுகலந்த அரக்கர்அழிய பிஞ்சுமனத்தை மாற்றுசீராய் ...

---------------------------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (7-Feb-15, 8:12 pm)
பார்வை : 337

மேலே