ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி - இராஜ்குமார்
ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டம் சரிக்காத சாதிமத சகதியை
சாம்பலாக்கும் சரித்திரப் பிறவியே காதல் ...!
அவமான அதிர்வால் இழப்பில் மூழ்கியும்
விடியலை விரட்டும் கைகோர்த்த கரங்கள் ..!
உடையை ஒதுக்கி தேகம் தழுவும்
உயிரிலா காமத்தில் காதலின் பிணங்கள் ..!
உல்லாச உறவோடு ஊடுருவும் பிழையால்
அநாதை மழலை வலியின் வடிவம் ..!
கோபத்தின் ஆழத்தில் இதயம் கிழிக்கும்
விவாகரத்தின் விரிசலே விரக்தியின் உச்சம் ...!
துயரம் துவட்டும் புன்னகை இதழில்
இன்னலின் இயக்கம் இடிந்து சரியும் ..!
காதலின் நெஞ்சமே வாழ்வாக துடிப்பின்
மழலை மனமே மரணம்வரை நீளும் ...!
விதியின் விதிக்குள் காதலை நுழைத்தால்
விதவையின் தனிமை துணையாய் ஒளிரும் ..!
நரம்பின் வயதில் காதலே துளிர்ப்பின்
விபச்சார விடுதியும் விதையாது மடியும் ..!
அலையும் புலனில் நேசமே நிறைந்தால்
உலகில் கற்பின் களவு சுழியாகும் ..!
- இராஜ்குமார்