சிறகு

குருவியாகவோ காகமாகவோ
எங்கோ பறந்துகொண்டிருந்தேன்...
திடீரென என் எடை கூடுவது போல் இருந்தது

தொலைவுகள் அறியாத
என் இறக்கைகள்
ஓய்வுபெற எண்ணின

உயர உயர மிதந்த நான்
மெல்ல கீழே கீழே பறந்தேன்

இறக்கைகள் மெல்ல
காற்றோடு கலந்துகொண்டிருந்தன

சின்ன சின்ன இறகுகள் தூசிமண்டலத்தில் கலந்தது
சற்றே பெரிய இறகு
உதிரும் இலை ஒன்றின்
அரிதாரம் பூசிக்கொண்டது

இதோ இந்த பரப்பில் தான்
எங்கோ என் கூடு
இறகு முழுவதும் கரைவதற்க்குள்
கூடடைந்து விடலாம் என எண்ணிய அந்தநொடி

மனிதனாகி விட்டேன்
அம்மா ஆபீஸ்க்கு நேரமாச்சு என எழுப்பிக் கொண்டிருக்கிறார்

அப்பாடா இறகு உடைவதற்குள் ஓர் இடம் சேர்நதாகிவிட்டது
என சற்றே நிம்மதி கொள்ளும் முன்
இரவுக்குள் புது இறகு முளைத்துவிடும் என
மனிதனுக்கு புரியாத ஓர் சிரிப்புடன்
சொல்லிக்கொண்டு இருந்தது
எனக்குள் இருக்கும் பறவை

எழுதியவர் : ஜெகதீஷ் (9-Feb-15, 11:24 am)
Tanglish : siragu
பார்வை : 141

மேலே