அந்த மூவிரல்களுக்கு என் முத்தம் - சந்தோஷ்

ஈரோடு தமிழன்பன் அய்யாவின் ஒரு கவிதை , கடந்த ஜனவரியில் வெளிவந்த “ பல்சுவை காவியம்” கலை-இலக்கிய- மாத இதழில் படித்தேன். படித்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. . மகாகவி அய்யாவின் கவிதையினை தட்டச்சு செய்ய இப்போதுதான் நேரம் கிடைத்தது. நான் உணர்வுபூர்வமாக ரசித்த கவிதையை உங்களுடன் பகிர்வதிலும் மகிழ்ச்சிக்கொள்கிறேன்.

கவிதையின் தலைப்பு “ நான் ஏன் எழுத வேண்டும் ? “

( தலைப்பு படித்தவுடன் ஒர் ஆச்சரியம்.. பல கேள்விக்குறிகள் எனது மூளையை தாக்கியது. ஏன் இப்படி சொல்கிறார்.? எனும் பரபரப்பு மனநிலையில் படித்து, தெளிந்து பின்பு நிதானமாய் படித்தேன். )

அந்த கவிதை............. இதோ.......!
----------------------------------------------------------------------

“ நான் ஏன் எழுத வேண்டும் ? “
********************************************

மாரிக்கால மழைத்துளிகள்
என் கவிதைக்குள் வந்து ஈர
ஆடைகளை
அவிழ்த்து உதறட்டும்.
தொலைவுகள் கடந்து வந்த
களைப்பு நீங்கிய பிறகு, வானத்து
நீலப்பள்ளியில்
நெருட்டுருச் செய்த கவிதைகளை
நிறுத்தி நிதானமாய்ச் சொல்லட்டும்
என் குழந்தைகளிடம்
பிறகு,
காய்ந்த காடுகளின், கழனிகளின்
குளம், ஏரிகளின்
பட்டியலைச் சரிபார்த்துக் கொண்டும்
ஏழை எளியவர்கள், பசித்த வயிறுகளின்
முகவரிகளை எடுத்துக் கொண்டும்
புறப்படட்டும்.

நான் ஏன்
மாரிக்காலம் பற்றி எழுத வேண்டும் ?


வசந்தம் வந்து என்
வார்த்தைகளின் உள்ளறையில்
உடைமாற்றி, ஒப்பனை செய்துகொண்டு
கற்பனைகளில்
கண்ணாடி பார்த்துக் கொள்ளட்டும்
வரும்போது
அது கொண்டுவந்த வண்ணங்களை
மண்ணின் மலர்களுக்கும், மழலைகள்
உதடுகளுக்கும்,
காதலர்கள் கனவுகளுக்கும்
பகிர்ந்து கொடுக்கட்டும்
அப்படியே
இல்லாதவர்கள் தாகத்துக்குத்
தன்னையே தண்ணீராகவும்
பசிக்கு உணவாகவும்
தாராளப்படுத்திக் கொள்ளட்டும்

நான் ஏன்
வசந்தகாலம் பற்றி எழுதவேண்டும் ?

கோடைகாலம்
சுட்டெடுத்த முத்திரைகளோடு
என் பாடல் வெளி எங்கும் பதியட்டும்.
நமுத்த மனத்தவர்களின்
சொதசொதக்கும் பொழுதுகள்-
நடுவில் அவர்களின்
வெப்பம் விலகிய இரத்தத்
திண்ணைகளில்
சூடுபற்றியும், சுரணை பற்றியும்
பேசட்டும்.
”எரியுங்கள் அல்லது
எரிந்து போங்கள் !” இப்படிப்
பொரிந்து தள்ளட்டும்
யுகம் பொசுக்கும் நொடிகளை
உசுப்பட்டும்.
சூரியன்
ஆறாத காயம்போல் மேற்கில்
இறங்கியபின்னும் அவன்
காலடிச் சுவடுகளின் கீழ்
கால் அநியாயங்கள் சாம்பலாகட்டும்.

நான் ஏன்
கோடைகாலம் பற்றி எழுதவேண்டும் ?

இலையுதிர்காலம்
மரணத்தின் தூதாக -நிலையாமைத்
தத்துவத்தின் நிர்வாகியாக என்
கவிதைக்குள்
பழுப்பு நிறச் சொற்களோடு வரட்டும்
சூழல் மறைப்பு இல்லாத
வெட்டவெளியின் தியானத்தில்
பேருண்மைகள் பிறக்கட்டும்.
ஒரு சொல்லுக்குள்ளும் ஒர்
இலைக்குள்ளும்
எத்தனை காலைப்பொழுதுகள்
இருந்திருக்கும்?
எத்தனை மாலைப்பொழுதுகள்
இருந்திருக்கும்?
கணக்குகள்,
எண்களை உதிர்த்துவிட்டு
விடைதாரமல்
கைபிசைந்து நிற்கும். ஆனால்
மீண்டும் தளிர்! மீண்டும் இலை!
மீண்டும் பூக்கள்!
மீண்டும் சொற்கள் ! மீண்டும் கனவுகள் !
மீண்டும் கற்பனைகள் !

நான் ஏன்
இலையுதிர்காலம் பற்றி எழுத வேண்டும்?

--ஈரோடு தமிழன்பன்.

-----------------------------------------------------------------------------

---கவிதை படித்த பிறகு சில நிமிடங்கள் நான் தொலைந்து சென்று ,மீண்டும், என்னை நானே தேடி கண்டுப்பிடித்து ஒரு நிலைக்கு வர நேரம் பிடித்தது. ஆம் ரசனையில், ஒரு கவிஞரின் எழுத்து தாக்கத்தில், அந்த கவிஞரின் சமூக சாட்டையடியில், கருத்தாழத்தில் உணர்ந்து , சிந்தனையில் ,ஒரு கற்பனையில் தொலைவதும் ஒரு வாசகனுக்கு கிடைத்த பாக்கியம்தானே.?

இந்த கவிதையை மீண்டும் மீண்டும் பலமுறை படித்து இருப்பேன். முதல் முறையாக படிக்கும் போது மெளனமாக உதடு அசைக்காமல் படித்தேன். அடுத்த முறை வாய்விட்டு உணர்ச்சிபாவத்துடன் படித்தேன். அதில் ரசனையின் உணர்ச்சி கிளர்ச்சியில் என் விழிகளில் கண்ணீர் சுரந்தது. அப்போது இந்த கவிதை எழுதிய அந்த மகாகவியின் மூவிரல்கள் என் கற்னை திரையில் தோன்றியது. முத்த மோதிரம் அணிந்து மிக சாதாரண வாசக செல்வந்தனாக பெருமைப்பட்டுக்கொண்டேன்.

நான் பெற்ற அதே ரசனை உச்சத்தை நீங்களும் பெற்று இருப்பீர்கள் தானே......!!


பி: கு ” ஈரோடு தமிழன்பன் அய்யாவின் இந்த கவிதையை தளத்தின் பிரபல கவிஞர்களின் படைப்புக்கள் வரிசையில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நன்றி : ” பல்சுவை காவியம் “ கலை-இலக்கிய-மாத இதழ்.

-இரா.சந்தோஷ் குமார்.


(இதே போல ரசித்து வியந்து உணர்ச்சி மிகுதியில் ரசனை கண்ணீர் சிந்திய கவிதைகளை அடிக்கடி பகிர்வது தொடரும். )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Feb-15, 4:02 pm)
பார்வை : 146

மேலே