நெருப்பில் பூத்த ஆசிரியர் நூல் ஆசிரியர் கலைமாமணி எப் சூசைமாணிக்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
நெருப்பில் பூத்த ஆசிரியர் !
நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் !
அலைபேசி எண் 9788170982
இதயம் பதிப்பகம், பூண்டி, அன்னை இல்லம், 118-ஆ, பெத்தானியாபுரம்
மேட்டுத் தெரு, மதுரை – 625 016. அலைபேசி : 97881 70982 விலை : ரூ. 250
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி. மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் ஆலோசகர் விஞ்ஞானி இனிய நண்பர் திரு.V. பொன்ராஜ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக விளங்குகின்றது.
நூலாசிரியர் உழைப்பால் உயர்ந்தவர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் அவர்கள் தன் வரலாற்றை சுவைபட, நான் என்று எழுதாமல் சாமிக்கண்ணு என்று புனைப்பெயர் சூட்டி சாமிக்கண்ணு வரலாறு போல தன் வரலாறு எழுதி உள்ளார். நல்ல நடை, அவர் எழுத, எழுத நாம் வாசிக்க, வாசிக்க அந்த எழுத்து வாசகர் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றது. ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு வந்தது.
பிறப்பு சம்பவமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை சரித்திரமாக வேண்டும் என்பார்கள். நூல் ஆசிரியர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் என்ற சாதாரண மனிதன், சாதனை மனிதனாக, கலைமாமணியாக உயர்ந்த வரலாறு படிக்கும் வாசகர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது. கற்பனை, பொய், மிகை எதுவுமின்றி திறந்த புத்தகம் போல நடந்தவைகளை நடந்தவை போலவே எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு.காந்தியடிகளின் சத்திய சோதனை போல உண்மை மட்டுமே எழுதி உள்ளார் .
இவருடைய தந்தை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலிருந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சிரமம் தரக்கூடாது என்று காணாமல் போய் விடுகிறார். அவரைத் தேடி வருந்துகின்றனர். இதனைப் படித்த போது எனது தந்தை ஒரு வருடம் காணாமல் போன போது நான் அடைந்த துன்பம் நினைவிற்கு வந்தது. என் தந்தை ஒரு வருடம் கழித்து கிடைத்து விட்டார். அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் காணாமல் போன நூலாசிரியர் தந்தை இறந்து விட்ட செய்தி அறிந்து குடும்பம் சோகத்தில் மூழ்குகின்றது.
தந்தையை இழந்த மகன் வாழ நடக்கும் போராட்டம், பள்ளியில் சேருதல், தலைமையாசிரியர் காட்டும் அளவற்ற அன்பு, பாசம், தந்தை போலவே எல்லா உதவிகளும் செய்து வந்த தலைமையாசிரியர் இறைப்பணிக்கு வர வேண்டும் போது நூலாசிரியர் மறுத்து விடுகிறார். அன்று அவர் எடுத்த முடிவு அவர் வாழ்வில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் பெறக் காரணமாகின்றது.
நூலாசிரியருக்கு மாணவராக இருந்த போதே திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் மிகுதியாக உள்ளது. விடுதியிலிருக்கும் வாசல் வழி வராமல், மரத்தில் இறங்கி வெளியே சென்று திரைப்படம் பார்த்து வருகிறார். இது தெரியாமல் தலைமை ஆசிரியர் திரைப்படம் பார்த்து வா என்று அனுமதி தருகிறார். ஒரே படத்தை தெரிந்து ஒருமுறை, தெரியாமல் ஒருமுறை என்று இரண்டு முறை பார்த்து வருகிறார். இப்படி பல சம்பவங்கள் நூலில் உள்ளன.
அறப்பணியான ஆசிரியப்பணி புரிந்தது. தலைமையாசிரியர் ஒருவர் திட்டமிட்டு செய்த சதியை சாமியார் ஒருவர் சரி செய்தார் என்று குறிப்பிடுகிறார். கால்பந்து விளையாட்டு வீரராக விளங்கியது. பசுமரத்து ஆணி போல வாழ்க்கை நிகழ்வுகளை பதித்து வைத்து இருந்த காரணத்தால் தன் வரலாற்றை செம்மையாக எழுதி உள்ளார். அதிக நினைவாற்றல் திறன் இருந்ததே இந்த நூல் வெளிவர முக்கியக்காரணம் என்றால் மிகையன்று.
விமானப்படைக்கு தேர்வாகி வண்டியில் பயணிக்கும் போது சாமிக்கண்ணு அம்மா வந்து தடுத்து புலம்பி மகனை மீட்ட நிகழ்வு நெகிழ்வு. அம்மாவின் பாசத்தை உணர்த்திடும் மறக்க முடியாத காட்சி.
கிராமத்தில் ஆசிரியர் பணியில் புதிதாக சேரும் போது அந்த ஊரில் சக ஆசிரியர் செய்த கொடுமை, யாரும் வீடு கொடுக்காதீர்கள், கடையில் பொருள் கொடுக்காதீர்கள் என்று சொல்லி வைத்து இன்னல் தந்த செய்தி படித்த போது ஆசிரியர் இனத்தில் சின்னப்புத்தி படைத்த சிலர் அன்றும் இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.
12-09-1961 முதல் மதுரையி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியை தொடங்குகின்றார். 01-07-1975 வரை 14 ஆண்டுகள் வாழவின் பொற்காலம் என்றே குறிப்பிடுகின்றார். மலரும் நினைவுகளை மறக்காமல் பகிர்ந்து உள்ளார். தேவராஜ் என்ற மாணவன் நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்தவன், பின்னாளில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகி தமிழக அரசின் அண்ணா விருதும் பெற்றதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் ஆசிரியராக இருந்த போது மாணவர்களுக்கு சுத்தம், சுகாததாரம், ஒழுக்கம் இவற்றுக்கு முக்கியத்துவம் தந்து கற்பிக்கிறார். கல்விக்கு முதலாக ஒழுக்கம் கற்பித்து நல்ல மாணவ சமுதாயம் உருவாகிட காரணமாக இருந்துள்ளார்.
பல மாணவர்களுக்கு ஏணியாகவும், தோணியாகவும் ஒளி தரும் விளக்காகவும் இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார். மாணவனாக இருந்த போது திரைப்படம் பார்த்த கலைஆர்வம் பின்னாளில் ஆசிரியரானதும் வெளிப்பட பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களை நடிக்க வைத்து காவல்துறையின் குறைபாடுகளை வசனத்தில் குறிப்பிட்டு விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.
மாமனிதர் கக்கன் அவர்கள் ஆசிரியர் மீது கோபப்பட்ட நிகழ்வையும் எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே ஊர்க்காவல் படையிலும் ஊதியமில்லாதத பணி என்ற போதும் உள்ளம் மகிழ்வுடன் தொண்டு செய்துள்ளார். குடும்பம் பற்றிய தகவல்களும் நூலில் உள்ளது. தனிமனித வரலாறாக மட்டும் இல்லாமல் தனிமனிதனை உயர்விக்கும் வரலாறாக உள்ளது. வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களும் நூலில் உள்ளன. பாராட்டுக்கள். நெருப்பு ஆற்றில் நீந்தி வந்த மலரின் வரலாறு மிக நன்று.