தலைப்பை தேடி

---- தளத்தில் உணர்ந்து நான் பின்பற்றும் பத்து கட்டளைகள் ----

1. இந்தியா வாழத் தகுதி இல்லாத நாடாகி விட்டது .கொலை , கொள்ளை , கற்பழிப்பு தவிர வேறு எதுவும் நடப்பதில்லை .

2. உலகம் நாளை காலை நாசமாய் போய் விடும் . காரணம் ...ஆண்கள் எல்லோரும் டி ஷர்ட் அணிகின்றனர் . பெண்கள் இந்த ஆண்கள் போடும் பாழாய் போன ஜீன்சை ....கொஞ்சம் கூட ஆய்வு மற்றும் மேம்பாடு இல்லாமல் , அது குறித்த சர்வதேச பார்வை பற்றிய ஐநா சபையின் விளக்கம் கேட்காமல் போட்டுக் கொள்வது வன்மையாக கண்டிக்க தக்கது .

3. நான்தான் தளத்தின் சிறந்த கவிஞன் .நோபல் பரிசு கொடுக்காதது அவர்கள் தவறு .

4. என் கவிதைக்கு அருமை போடுபவர்கள் எனக்கு சமமான கவிஞர்கள் . அவர்களுக்கு நான் அருமை போடுவேன் .மற்றவர்கள் கவிதை எழுதுவதை விட்டு விட வேண்டும் .அல்லது என்னை பாராட்ட தொடங்க வேண்டும் .

5. என் மதம்தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாத்திரை . அதை தினம் போட்டுக் கொண்டால் உங்கள் தேஜஸ் கூடி , புகழ் பரவி , மூட்டு வலி நீங்கி , கண் பார்வை பிரகாசமாகி , அடுத்த மாத சம்பளத்தில் ஊதிய உயர்வு பெற்று , மனம் அப்படியே பரவசம் அடைந்து , உங்கள் பிள்ளைகள் மாநிலத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்று , மாதம் மும்மாரி மழை பொழியும் .. மாத்திரை போட்டவர்களுக்கு மட்டும் .
ஸ்டாக் நிறைய இருக்கிறது .வாங்கி செல்லுங்கள் ..

6.தமிழ் எக்கச்சக்கமாக முன்னேறி விட்டது . அதனால் கவலையை விடுங்கள் .தினமும் மூன்று முறை தமிழ் வாழ்க ( மாத்திரை சாப்பிட்ட பிறகு ) என்று கரகோஷம் எழுப்புங்கள் .நீங்கள் மாத்திரை போட்ட பலனை இரு மடங்கு அடைவீர்கள் .

7. காதல் உலகத்திலேயே சிறந்த வஸ்து . ரேஷன் கடையில் அரிசி கிடைக்காதவர்கள் இதை சாப்பிட்டு உயிர் வாழலாம் .

8.பெண்களுக்கு ஒரு இன்னல் என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் . மற்ற பிரச்சனைகள் ? .. அதெற்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண எனக்கு நேரமில்லை .

9 என் குடும்பம் , வேலை , படிப்பு எல்லாம் கெட்டாலும் பரவா இல்லை . நான் எழுதுவேன் . எழுதி இந்தியாவை 2016 ல் ...இதே நாள் .... வல்லரசு ஆக்குவேன்.( அஷோக் .. உன் டைரில குறிச்சு வச்சுக்க என்று பின் குறிப்பு கட்டாயம் இருக்கும் என் கவிதைகளில் )

10 கவிதை போட்டி நடத்தும் போது 3000 ருபாய் பரிசு பணத்தை எழுதிய 6000 பேருக்கும் தலா எட்டணா வீதம் பிரித்து கொடுக்க பரிந்துரை செய்வேன் .

பதினொன்றாவதாக ..( என்னை போன்ற மகத்தான படைப்பாளிகள் அதிகமாகத்தான் சொல்வார்கள் .அது எம் கடமை . பெருமை அல்ல )
11. சிலசமயம் நான் என்னை மறந்து ஒளியை விட ஒரு கிலோ மீட்டர் வேகமாக ஓடும் போது ..என் பேனா அது பாட்டுக்கு எழுதி சென்றுவிடும். அதை நீங்கள் "ஒன்னும் விளங்கல" என்று பாமரத்தனமாக சொல்வதற்கு முன் ...
ஒரு நிமிடம் சாக்ரடீஸ் எழுதிய " தமிழ் கவிதைகளில் பின் நவீனத்துவம் " படியுங்கள் .அப்போது புரிந்து கொல்வீர்கள். மன்னிக்கவும் .கொள்வீர்கள்.

எழுதியவர் : ராம் வசந்த் (12-Feb-15, 11:12 am)
Tanglish : thalaippai thedi
பார்வை : 416

சிறந்த கட்டுரைகள்

மேலே