ஆவாரங்காடு oo குமரேசன் கிருஷ்ணன் oo
அதுவொரு ஆவாரங்காடு
அம்மன் போட்டவர்களுக்கு
ஆவாரம் பூ கொய்ய...
அவளோடு சிலபொழுது
சென்றதாய் ஞாபகம் ?
அவளொரு சலவைக்காரி
அதரச் சிரிப்பொலியில்
அடித்து துவைத்தெனைக்
அவ்வப்போது காயவைத்து
அக அழுக்குகளை
அகற்றிவிடுவாள் ...
அந்த ஆவாரங்காட்டில்
உதிர்ந்த இலந்தை பழங்களை
அவள் பொறுக்க...
உதப்பழங்களை பறித்து
என் வீரத்தை முழுவதும்
பறைசாற்றியிருப்பேன் ..நான் !
இலந்தைமுள் கிழித்து
இரத்தம் சொட்டுகையில்
அவளின் விழியோர நீர்
பல விந்தைகளை
என்னுள் மீட்டும் ?
அவள் அதிகம் பேசுவாள்
அவளோடு நானிருக்கையில்
மௌனத்தில் புதைந்திருப்பேன் ...
ஆனாலும் ...வழக்கம்போல்
அடுத்த அம்மன் வரவினை
எதிர்நோக்கியிருக்கும்
என் உள்மனம் ?
----------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்