வலிகளின் பதாகைகள்

ஜன்னலை திறக்க முனைவதற்குள்
உள் நுழைந்த கதவை
சாத்திவிடுவது போல்
ஒவ்வொருவரிடமும் ஒருவலியை
திணித்து விட்டுத்தான் திரும்புகின்றன
இன்றைய இந்த நாட்கள்

பெருமூச்சில் தொடங்கி,
கோபதாபம்,குறும் நகை
ஆர்ப்பாட்டம்,அழுகை
ஓலம்,ஒப்பாரி பிரிவு,பின் தள்ளல்
பாசம் ,பரிவு காதல்,கண்ணீர் என்று
எல்லா முற்றத்திலிருந்தும் பிரிந்து
மகிழ்ச்சியை குறுக்கறுத்து
வலிகளின் வழி விசாலமாக விரிகிறது

அடைபட்ட அறைச் சுவரில்
அறைபட்ட பட்ட ஆணி
ஏக்கங்களின் சுலோகங்கள் எந்திய படி
காலத்தின் முன்
பரீட்சயமான பதாதையாய்
தொங்கிக் கொண்டிருப்பது போல்

எல்லோருக்கும் எல்லாம் தெரியும்
என்று எண்ணியிருப்பதால்
எவரும் இன்னொருவரின்
வலி குறித்து வழி மொழிவதில்லை.

நேற்றை ஒப்பிடுகையில் நாளை
இன்றை விட பயங்கரமாய் இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம்
அது காலத்தின் கணிப்பாயிருக்கும் நாளில்

இப்படி,இப்படி
விதியை நொந்து கொள்பவனின்
எண்ணிக்கை மேலுமொன்று கூடுவதிலிருந்து
தவிர்க்க முடியாமலேயே போகிறது
எல்லா சந்தர்ப்பங்களிலும்
என்று நான் எழுதி முடிக்கையில்
அருகிருந்தவன் தன் காதல் பற்றிய
பெரும் துயரொன்றை சொல்லி
அழத்தொடங்கினான்
எனக்கு இன்னொரு வலி தந்த
கவலை துளியுமின்றி.



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (13-Feb-15, 11:50 am)
பார்வை : 190

மேலே