நாக்கு வழிப் பாதை
அம்மா சொல்லித் தந்ததும் போதாமல்
ஆறு சேனல் பார்த்தும்
அறுபத்தெட்டுப் புத்தகம் படித்தும் தான்
கற்றுக் கொண்டேன் சமையலை.
தட்டில் பிசையும் போதே
நாக்கில் எச்சில் ஊராமல் போனதற்கு
வேறேதும் காரணம் கூட
இருந்திருக்கலாம்,
முன்னம் என்னைக் காறித் துப்பியதில்
வரண்டும் போயிருக்கலாம்,
வழியெங்கும் ஏக்கத்தில்
அலைந்ததில்
வாயோரமாய் வழிந்தும்
போயிருக்கலாம்,
இருந்தும்,
உதட்டுக்கும், தொண்டைக்கும்
இடையில்,
ஊராத எச்சிலால்
சுவையறியாது போன...
அவன் நாக்கு வழிப் பாதையை
என் உணவு
கடந்து போகும் போதெல்லாம்,
என்னைக் கொன்று விடுவதாகவே
பார்க்கிறான் அப் பாதகன்.

