ஊருக்கொரு வரலாறு -ரகு

ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
இருக்குமந்தப் பாறைக்குழிக்கு
மழைபெய்தால்
சேகரிக்கமட்டுமே தெரியும்

தூரமென்று
சொல்ல முடியாத தூரத்தில்
ஒரு முரட்டு அரசமும்
அந்த ஊருக்கு
விலாசமாகியிருந்தது
வெகுகாலமாய்

அருகருகிலிருக்கும்
ஊர்களின் பறவைகளுக்கும்
வேடந்தாங்கலாய் இருந்தன
அவ்விரண்டும்

வரலாறைக் கிளறினால்
வசப்படும் கருப்பண்ணசாமிக்கு
என்றாவது
பொங்கல்வைத்துக்
கெடா வெட்டுவார்கள்

இரவு நேரத்தில்
பாறைக்குழியில்
தாகம் தணித்துவிட்டு
வேர்கள் பரப்பிய
அரசமரத்தடியில்தான்
ஒய்வெடுப்பாராம் அவர்
பரவலானப் பேச்சு
ஊருக்குள்

மதுக்கடையில்
இருவேறு சாதிக்காரர்கள்
போதையில் மோதிக்கொள்ள
கலவரம் வெடித்தது ஒருநாள்

இரு கோஷ்டிகளும்
பேராயுதங்களைப் பழகியிருந்தனர்

பிரிவினைவாதப் போர்
முடிந்திருந்தபோது
செத்துப் போன மனிதத்தையும்
சேர்த்துச் செத்துப் போனவர்கள்
ஈரெழுத்து எண்ணிக்கையில்

அந்த வடுக்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
மாறியிருந்த போதுதான்
புரட்டியெடுத்தது
ஒருநாள் பேய்மழை

மறுநாள்
நிரம்பியிருந்த பாறைக்குழியில்
குளித்து விளையாடிய
சகோதரச் சிறுவர்கள்
ஆழத்தில் சிக்கி
உயிர்ச் சிறகிழந்தனர்
அரசமரத்தடியில்தான்
கிடத்தியிருந்தனர்
அவர்களை

பின்னொருநாளில்
அரசமரக் கிளையில்
புடவை கட்டித்
தூக்கில் தொங்கினாள்
இளம் பெண்ணொருத்திக்
காதல் தோல்வியில்

முச்சாவும்
ஊருக்கிட்ட சாபமென்று
ஊரைக் காலிசெய்தனர்
மக்கள்

சாதிக் கலவரம்
பல உயிர்களைக்
காவு வாங்கியிருந்தபோதும்
சாபமெனக் கண்டறியாததற்கு
விளக்கமில்லை அவ்வூரில்

எது எப்படியோ
பல ஆண்டுகள்
கடந்துவிட்ட நிலையில்
பறவைகளும் வவ்வால்களும்
ஊர்வனவுமாய்க்
களைகட்டுகிறது அவ்வூர்
இன்று

கவனிப்பாரற்றுக் கிடந்தக்
கருப்பண்ண சாமிக்கு
ஒரு நற்செய்தி
லேகியம் விற்கும்
இரண்டு தம்பதியர்
குழந்தைகள் சகிதம்
குடிசை போட்டிருக்கிறார்களாம்
ஊர் முச்சந்தியில் !
--------------------------------------
பொறுமையாய்ப் படித்து முடித்ததற்கு நன்றிகள் பல !

அன்புடன்
-சுஜய் ரகு-

எழுதியவர் : அ.ரகு (14-Feb-15, 8:01 pm)
பார்வை : 191

மேலே