காக்கைச் சிறகினிலே-இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை

பத்து மாதக் குழந்தையின் கொஞ்சும்
பிஞ்சு விரல்கள் பார்க்க அழகுதான்
பத்து வயது பிள்ளைக்கு அப்படி
இருந்தாலோ, வறுமை வயிற்றிலடிக்கும் பஞ்சம்தான்

ஊரைக் கூட்டி ஒன்றாய் உண்ண
காக்கைச் சிறகினிலே பாத்திரம் செய்வோம்

நிறத்தில் யாரும் வேற்றுமைக் கண்டால்
கருமேகம் தந்தது நீரென்று மறந்தால்

காக்கைச் சிறகினிலே பூப்பந்து செய்து
அதை காதலர்களுக்குக் கொடுத்து விடுவோம்
கருப்பு வெள்ளை வேற்றுமை எல்லாம்
காதலின் கண்களுக்கு கானல் நீர்தான்

பூங்காவிற்கு புதுத்துணி கட்டும் வாடிக்கை
ஏற்றத் தாழ்வு என்பதுதான் இயற்கை
ஏறி மிதித்து நடத்துகிறோம் வாழ்க்கை

காக்கைச் சிறகினிலே உடையொன்று நெய்து
ஒற்றுமை ஓங்கிட உபகாரம் செய்வோம்

கர்ணன் வாழ்ந்த கருணை நாட்டினிலே
பாரி வள்ளல் புதைந்த பாரினிலே
கள்வர்கள் வந்து குடி கொண்டார்களே

காக்கைச் சிறகினிலே காகமொன்று செய்து
விழுந்த விருந்தாளிகளை விளிக்கச் செய்வோம்

எழுதியவர் : chitra (15-Feb-15, 12:59 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 90

மேலே