தீயில் விழுந்த சிறு விட்டில் பூச்சியாய் மீண்டு மீண்டு மனம் இறக்குதே

மீண்டு வா !
```````````````
தீயில் விழுந்த
சிறு விட்டில் பூச்சியாய்
மீண்டு மீண்டு
மனம் இறக்குதே
பாத கொலுசினிலும்
பாவை நிழலிலும்
மீண்டும் இணைய
மனம் ஏங்குதே
கருவைத் தேடி
தோற்ற உயிரனுவாய்
விரக்தியின் விளிம்பில்
மனம் தோற்குதே
பூக்கள் வடித்த
கூந்தல் வாசமதை
மீண்டும் நுகர
மனம் ஏங்குதே
கிழிந்த புகைப்படத்தை
உயிரில் தைக்க
நினைவுத் துளியை
மனம் சேர்க்குதே
இயல்பு இழந்து
இவ்வுலகு துறந்து
நொறுங்கி நொறுங்கி
மனம் நோகுதே
உயிர் இழந்த
செய்தி அறிந்து
மீண்டும் ஒருமுறை
முகம் காட்டிடு
எரிந்த உடலில்
சாம்பல் பூச்சியாய்
உன்னைச் சுற்றும்
வரம் தந்திடு
-- கற்குவேல் .பா .