தாயம்மா

இருட்டிவிட்டது ..

அவளைப் போலவே
அந்தத் தெருவிலும்
ஒரே நிசப்தம் ......

தெரு விளக்கின்
மங்கலான வெளிச்சத்தில்
மென்மையாய் உருகும் அந்த
மெழுகு மனம்

அந்தத்
தளர்ந்த விழிகளிலிருந்து
உதிரும்
ஒவ்வொரு துளி நீரிலும்
ஒரு கனவு உதிரும்

எண்ணெய் இழந்து
எரியும் ஒரு
திரியாய்..
அந்த ஏழைக் கிழவி

அருகில் அவள்
திருவோட்டை
நக்கிக்கொண்டிருந்த நாய்
வாலாட்டி விடை பெறுகையில்
அவள் சருகு இதழ்களில்
ஒரு சோகம் தடவிய புன்முறுவல்

எதிரே..
ஒரு மரம்

அதில் ,
தொட்டில்களாய் தொங்கிய
தாழ்க்கிளைகளை பார்க்கிறாள்

******அவளின் தாலாட்டுகள்
******மனசுக்குள் ஒலித்தது

பிறகு,
தன்னையே பார்க்கிறாள்

******ஊட்டி வளர்த்த குஞ்சுகள்
******ஒதுக்கிய நினைவு
******நெஞ்சுக்குள் வலித்தது

அந்தத்
தளர்ந்த விழிகளிலிருந்து
உதிரும்
ஒவ்வொரு துளி நீரிலும்
ஒரு கனவு உதிரும் .....(1986)


('சிகரங்களை நோக்கிய சிறகடிப்புகள்' எமது முதல் கன்னி முயற்சி நூலில் இடம் பெற்ற எளிய காட்சிக் கவிதை இது . கவிதை எழுதப் பழக துவங்கிய முதல் வருடத்தில் கனவு போல் உதிர்ந்த கண்ணீர்த்துளி ..
******எங்கள் ஊர் தாயம்மாவுக்கு இக்கவிதாஞ்சலி ) ( 1989 ல் அவள் மறைந்தாள்)

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-Feb-15, 5:19 pm)
பார்வை : 95

மேலே