தோழிக்கு ஓர் கடிதம்
தோழிக்கு ஓர் கடிதம்:
அன்புள்ள சந்தியா!
நீ ஏன் பெண்ணாக பிறந்தாய்? ஒருவேளை நீ ஆணாக பிறந்திருந்தால் நாம் ஆயுள் வரை நட்பாக இருந்திருக்கக் கூடும்.
யாரேனும் அதிர்ந்து பேசினாலே நீ அழுதுவிடுவாய்.ஆனால் இன்று உன் சாவைக் கண்டு அதிர்ந்து போனவர்கள் ஏராளம்.
உன் அழகைக் கண்டு
உன் அங்கம் தொட நினைத்தவர்கள் அதிகம்.
ஆனால் நீ என்னை உரசி நின்ற போதும் நட்போடு உன் கைக்கோர்த்து நடந்தவன் நான்.
நீ என் தோள் மீது நட்போடு சாய்ந்ததை கூட காதல் என்று கொச்சைப் படுத்தி பேசியது இவ்வுலகம். உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் நமக்குள் இருந்த உன்னதமான நட்பு.
நானும் நீயும் படிக்கத் தான் பூங்காவிற்கு சென்றோம் அங்கே படித்துக் கொண்டிருந்ததைக் கூட
படுத்துக் கொண்டிருந்தனர் என்றது நம் சமூகம்.
எப்போதும் நீங்கள் இருவரும் சேர்ந்தே இருக்கிறீர்கள் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கல்யாண பேரம் பேசியது நம் நண்பர் கூட்டம்.
கடைசியில் நம் போற்றோர்கள் அவர்களின் பங்கிற்கு நாம் ஊர் மேய்வதாகச் சொல்லி அசிங்கப் படுத்த.
பிறகு யார் தான் நம் நட்பை புரிந்து கொள்வார்? என்று நான் கேட்ட ஓர் கேள்விக்கு நம் நட்பை கற்பென்று எண்ணி உயிர்த்தோழி நீ உயிர்த் துறந்தாயோ.
நெஞ்சில் ஈரம் இல்லாமல் பேசிய மனிதர்களின் வாயை நீ அடைத்துவிட்டாய்.
இப்போதாவது உயிர்த்தெழு ஓர் ஆணாக அப்போதாவது நாம் சேர்ந்து நடக்கலாம் வாழ்நாள் முழுவதும்.
அன்புடன் அரி.