பட்டுப் பூச்சிகள் நாங்கள் பட்டாம் பூச்சிகளானோம்

பட்டுப் பூச்சிகள் நாங்கள்
பட்டாம் பூச்சிகளானோம்...(பட்ட பூச்சிகளானோம்)

முதிர்பள்ளி மாணவராய்
முதலாமாண்டில் முகம் காட்ட
எதிர்பட்ட முகமெல்லாம்
யாரோ நினைவில்லை...

அறிமுகம் தேடி
முகவரி சொல்ல,
அகவரி தேடி
சில முகம் செல்ல,
தேடிய முகங்கள்
தோழமை கொள்ள
மூடிய உணர்வும்
மொட்டவிழ்ந்ததே...

பட்டுப் பூச்சிகள் நாங்கள்
பட்டாம் பூச்சிகளானோம்...

அரும்பு மீசைகளும்
குறும்பு குமரிகளும்
கரும்புச் சுவை நட்புக்காய்
விரும்பி திரியும்
எறும்பு கூட்டமாய்
இரண்டாம் ஆண்டில்...

பட்டுப் பூச்சிகள் நாங்கள்
பட்டாம் பூச்சிகளானோம்
முற்றம் வந்த முழுமதியாய்
மூன்றாம் ஆண்டு..
கற்று வர கலந்து சென்ற
சுற்றுலாவால்
ஹைட்ரஜன் பிணைப்பு
அயனிப் பிணைப்பானதே...

துரும்புகள் சேர்ந்து
இரும்பாகிட
உருவான கருவியோ
கருத்தரங்கானதே...
வெற்று வார்த்தை
வேந்தர்களின்
உதடுகள் தாமே
ஊமையானதே...

பட்டுப் பூச்சிகள் நாங்கள்
பட்டாம் பூச்சிகளானோம்...

கானம் இசைத்த
வானம்பாடி நாங்கள்...
வானம் பிளக்கும்
வருடம் வந்தது- 2014
சேர்த்து பிடித்த
கல்லூரி தருவின்
இலையுதிர்க்காலம்
உதறி தள்ளிய சருகுகள் நாங்கள்...
கதறி அழுத கார்முகினின்று
சிதறி விழுந்த கண்ணீர்த்துளிகள்...

பட்டுப் பூச்சிகள் நாங்கள்
பட்டாம் பூச்சிகளானோம்

எட்டா தொலைவும்
தொட்டு விடுவோம்
இறக்கைக் கொண்டே...

சருகானாலும்
சத்தாய் போவோம்
தருவின் மண்ணுக்கே...

சிதறிய மாரியானாலும்
முத்தாய் போவோம்
சரித்திர சிப்பிக்குள்...

எழுதியவர் : அஞ்சா அரிமா (18-Feb-15, 5:46 pm)
பார்வை : 1275

மேலே