மாற்றம் வேண்டும்
பற்பல மாற்றம் கண்டோம்
பாரினில் ஏற்றம் கொண்டோம்
பட்டமும் படிப்பும் தாண்டி
படி பல ஏறி நின்றோம்.
கல்லோடு வில்லும் வாளும்
கடந்து போய் இற்றை நாளில்
கண்டத்தை கடந்து போகும்-ஏவு
கணைகளை ஆக்கி நின்றோம்.
தோற்றங்கள் பலவும் தோன்றி
தொகையில்லாச் செழிப்பும் பெற்றோம்
மாற்றங்கள் உண்டு இங்கே
மாந்தர் மனங்களில் இல்லை இன்னும்.
தேற்றங்கள் இனியும் வேண்டாம்
தெளிவோடு நல் வழி சமைக்கும் -மன
மாற்றத்தை மனதில் கொள்வோம்
மடமையை வென்று நிற்போம் .