தமிழ் விடியலே வா
(உலக தாய்மொழி நாள் கவிதை)
தரமான கல்வியினைப் பெறுவ தற்குத்
தாய்மொழியாம் தமிழ்தன்னில் கற்றல் வேண்டும் !
உரமான சிந்தனையை வளர்ப்ப தற்கும்
உயிரான தமிழ் மொழியைக் காப்ப தற்கும்
பிறமொழியில் படிப்பதனை விளக்கி விட்டுப்
பீடுதமிழ்ப் பள்ளியிலே படித்தல் வேண்டும் !
திறம்வாய்ந்த நமதரசு தமிழில் கற்கத்
தெளிவான சட்டத்தை இயற்றல் வேண்டும் !
கல்வியினை வணிகமாக்கும் போக்கை விட்டுக்
கடைக்கோடி மக்களினம் படிக்கும் வண்ணம்
பள்ளியெங்கும் சமச்சீராம் கல்வி கொண்டு
பைந்தமிழில் பாடத்தை நடத்தல் வேண்டும் !
சொல்லுகின்ற சொற்கள்நற் றமிழில் வேண்டும்
சுடுமொழியாம் ஆங்கிலத்தைத் தவிர்த்தல் வேண்டும் !
இல்லமதில் பெற்றோரும் பிள்ளை கட்கே
இனியதமிழ் உணர்வுதனை ஊட்டல் வேண்டும் !
தமிழ்வழியில் மேற்படிப்புப் படிப்ப தற்குத்
தக்கபடி பலநுல்கள் படைத்தல் வேண்டும் !
தமிழ்வழியில் கற்போர்கே வேலை வாய்ப்பில்
தலையாய முன்னுரிமை வழங்கல் வேண்டும்!
தமிழ்மொழியில் நம்பெயரை வைத்தல் வேண்டும்
தமிழ்நாட்டில் தமிழ்கல்வி அளித்தல் வேண்டும் !
தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி தரும்அந் நாளே
தமிழ்விடியல் தோன்றுகின்ற நன்னாள் ஆகும் !