கம்ப்யூட்டர் காளி
"பிறந்தது ஒரு ஊர், பிழைக்க ஓர் ஊர்" - இன்றைய சராசரி இளைஞனின் நிலை. இதற்க்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனந்தபுரம், என் சொந்த ஊரான வெள்ளி மலையிலிருந்து 500 மயில் தொலைவில் உள்ள அழகிய நகரம். அங்கு மென்பொருள் பொறியாளனாக வேலை செய்யும் நான், தினசரி என் பெற்றோரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பது வழக்கம்.
அன்று,
என் தாயின் உடல் நலம் குன்றியிருப்பதை அவர் பேச்சில் உணர்ந்தேன் - சளி, இரும்மல்! மறுநாள் நலம் விசாரிக்க அழைத்தபோது, என்னை உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று கனத்த குரலில் சொன்னார். நான் மறுத்துச் சொன்ன காரணங்களை மறுத்தார். உலகில் எவராலும் வெல்ல முடியாத ஆயுதத்தை கையில் எடுத்தார் - அழுகை! அடுத்த 30 நொடிகளில் என் விடுமுறை விண்ணப்பம் அலுவலகத்தை சென்றடைந்தது, 30 நிமிடங்களில் நான் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தேன்.
ஜனக் கூட்டத்தின் நடுவே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, முறுக்கு மீசை - கிழவனார் ஒருவரைக் கண்டேன். இவருக்கு தெரிந்திருக்கும்.
"ஐயா?! வெள்ளி மலைக்குச் செல்லும் பேருந்து......", தயங்கிய சுரத்தில் விசாரித்தேன்.
"வெள்ளி மலை'யா? நடை மேடை மூன்று. செல்! வேகமாக செல்! பேருந்து புறப்பட 5 நிமிடங்கள் தான் உள்ளது, இதை விட்டால் பிறகு 5 மணிக்கு தான் அடுத்த பேருந்து. வேகமாக செல்!", என்று என்னை விரட்டினார்.
என் ஓட்டத்தின் வேகம் நடை மேடை மூன்றை அடைந்தபோது சற்று குறைந்தது. வேகமா நடந்தவாறே நீல நிறச் சட்டை அணிந்துருந்த மனிதரிடம் கேட்டேன் -
"வெள்ளி மலை பேருந்து! போயிருச்சா?!"
நிதானமாக ஒரு வாய் தேநீர் அருந்திவிட்டு, அதனினும் நிதானமாகச் சொன்னார், "நான்
இல்லாமல் போகாது!".
அடுத்து ஒரு வாய் தேநீர் அருந்தி விட்டுச் சொன்னார், "நான் தான் ஓட்டுனர்" - கையில் இருந்த பேப்பர் கப்பை நீட்டி "அதோ பேருந்து! 12.40'க்கு தான் டைம்", என்றார்.
நேரம் 12.05. அடப்பாவி கிழவா! உனக்கு என்ன பாவம் செய்தேன், இப்படி ஓடவிட்டாயே? - கிழவனை நொந்து விட்டுப் பேருந்தை நோக்கி நடந்தேன்.
வயதான பேருந்து! குறைந்தது என் வயதிருக்கும். வெள்ளி மலை சென்றதும் காயீலாங்கடைக்கு போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
குடைசாய்ந்த அந்த ஜாம்பவான் காலத்து பேருந்தில்,
கடைசி இருக்கையில் அமர்ந்து உன்னிப்பாக சில்லறை எண்ணிக்கொண்டிருக்கும் நடத்துனர்,
ஜன்னல்'லோரம் தலை சாய்ந்து உறங்கும் பெண்,
பெயர்த் தெரியாத வார இதழை வாசிக்கும் அங்கிள் (uncle),
தந்தையின் எச்சரிக்கையை உதாசினித்து பேருந்தின் நடுவே ஓடி விளையாடும் குழந்தை - எல்லாவற்றையும் கடந்து ஒரு சிந்துபாத்தின் கம்பீரத்தோடு ஏதோ ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.
இரண்டு மூன்று பழைய எஸ்.எம்.எஸ்' களை மீண்டும் வாசித்தேன். "vintage travel" என்ற தலைப்பில் பேஸ்புக்'இல் ஒரு செல்பி - எப்படியோ 45 நிமிடங்களை கொன்றுவிட்டேன். பேருந்து மெல்ல புறப்பட்டது.
சற்று நேரத்தில் "முச்ச்" என்று ஒரு சத்தம் கேட்டது.
"என்ன சத்தம்? எலியாக இருக்குமோ?! - இருக்கையின் கீழ், கால் மற்றும் என் கைப்பை நடுவேத் தேடிப்பார்த்தேன்.
தேடலின் நடுவே என்னை இடித்துக்கொண்டு அருகில் அமர்ந்தார் ஒருவர். 90 கிலோ எடை! இருக்கையின் 70% இடத்தை ஆக்கரமித்துக் கொண்டார்.
- 90 கிலோ எடை! முரட்டு மனிதர்! சீறி வந்த என் கோபம், பயமாக உருமாறி, மெல்லிய புன்னகையாக பிரதிபலித்தது. மீதமிருந்த 30% இடத்தில் ஆற்றங்கரை பாறையின் அருகே ஒதுங்கிய தவளை போல் ஒடுங்கி அமர்ந்தேன்.
இதற்கிடையில் மீண்டும் ஒரு "முச்ச்" ஒலித்தது.
90 கி. மனிதர் முன் இருக்கையின் நடுவே இருந்த இடைவெளி வழியாக ஒரு கண்ணை மட்டும் வைத்துப் பார்த்தார். பிறகு என்னை பார்த்து ஒரு வித வெட்கத்துடன் -
"பையனும் பொண்ணும் கிஸ் அடிச்சுக்கறாங்க! பிரெஞ்சு கிஸ்!!", என்றார்.
மீண்டும் "முச்ச்"! மீண்டும் பார்த்தார்.
"இன்னொரு பிரெஞ்சு! அவள் தோளில் உறங்குகிறான். உண்மையாகச் சொன்னால் உறங்குவது போல் நடிக்கிறான். நீ வேணும்' னா பாரு இன்னும் நிறைய சில்மிஷம் செய்வான்", கண் சிமிட்டியவாறு சொன்னார்.
"யார் என்ன செய்தால் உனக்கென்ன?", என்று கேட்கத் தோன்றியது - குண்டு மனிதர், ஒரே குத்து என் கதைக் காலியாகிவிடும். மொபைலை எடுத்து பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொண்டேன்.
32 கி.மி. க்கு மேல் அணு அளவும்
கூட வேகமாக செல்லமாட்டேன்
என்று யாரிடமோ சத்தியம் செய்தது போல் பேருந்தை சீராக செலுத்தினார் அந்த நிதான ஓட்டுனர்.
வெகு நேரம் சத்தம் எதுவும் கேட்கவில்லை -
பொறுமை இழந்த திரு. குண்டு ஓட்டை வழியாக மீண்டும் பார்த்தார். "ம்ஹூம், ஒண்ணுமேயில்லை", என்று ஏமாற்றத்துடன் சொன்னார்.
வேறு வழியின்றி வலிய புன்னகயிதேன்.
"எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க! அடக்கமானப் பிள்ளைங்க! என்னக் கேக்காம எங்கேயும் போகாதுங்க! இந்த பெண்ணை பாரு, போன மாசம்தான் வயசுக்கு வந்திருக்கும். என்ன பண்ணுது பாரு!", என்றார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பன் செய்யும் வேலையா இது? பேச்சா இது? - என்ற தொனியில்,
"ஓ! இரண்டு பெண் குழந்தைகளா?!!!!", என்றேன்.
அதை பெருமையாக எடுத்துக்கொண்டு, "ஆமாம்'பா! என்ன பாத்தாத் தெரியல' இல்ல?! 55 வயசாச்சு, யாரும் நம்பமாட்டாங்க, இன்னும் இளமையா இருக்கேன், இல்ல?", என்று தன்னைத் தானே ரசித்து கொண்டார் - என்னை நானே நொந்துகொண்டேன்.
"தம்பி! உங்கள எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பேர் என்ன?"
"நிரஞ்சன்" - என்றேன்.
"என் பேரு - காளி. காளிமுத்தையா முழு பேரு, ஆனா 'கம்ப்யூட்டர் காளி'னு சொன்ன தான் தெரியும். ஏன் அந்தப் பேரு சொல்லு பாப்போம்?", என்று கேட்டார்.
"தெரியாது", என்று பொருள் பட மீண்டும் ஒரு புன்னகை - வேறு என்ன நான் செய்ய?!
"எங்க புக்கிங் ஆபீஸ்'ல முதல் முறையா கம்ப்யூட்டர் வந்தப்போ நான் தான் 'ஆண்' பண்ணினேன். ஒரு பயலுக்கு தெரியல! அதான் 'கம்ப்யூட்டர்' காளி" - பெயர் விளக்கம் தந்தார்.
கம்ப்யூட்டர் கண்டுபிடித்த சார்லஸ் பப்பேஜை'ஐ, 'கம்ப்யூட்டர் சார்லஸ்' என்று யாரும் அழைத்ததாக நானறியேன் - 'கம்ப்யூட்டர்' காளி. ம்ம்!!!! நன்று!!!!
பேச்சின் நடுவே நல்ல வேளை காளி இறங்க வேண்டிய இடம் வந்தது.
"சரி தம்பி. நான் இங்க இறங்கனும்", என்று கூறியவாறே மீண்டும் ஒரு முறை ஓட்டை வழியாகப் பார்த்துவிட்டு, என்னை நோக்கி "ஒன்றும்மில்லை" என்று கையசைத்துவிட்டுச் சென்றார்.
- ஒழிந்தான். மூச்சு விட சற்று இடம் கிடைத்தது.
காளி இறங்கிய பின் பேருந்து ஓர் இரண்டு கி. மி. கடந்திருக்கும், மீண்டும் "முச்ச்" ஒலிக்க ஆரம்பித்தது. கூடவே காளியின் ஒவ்வொரு சொல்லும் மறு ஒலிபரப்பானது.
பெண்ணின் வயதை கணக்கெடுத்த காளி, பையனின் வயதை கணக்கிடவில்லை!
தன் பிள்ளைகளை பெருமையாக பேசிய காளி, இந்த பெண்ணை நேசிக்கும் ஒரு தந்தை, எங்கோ உண்டு என்பதை மறந்தது ஏன்?!
பையனின் செயலை கவனித்த காளி, அவன் குணத்தை அளக்க மறந்தான். உண்மை காதலன் காதலியுடன் பொது இடங்களில் இப்படி நடந்துகொள்வானா?! - சந்தேகங்கள் பல என்னுள் துளிர்விட,
மீண்டும் ஒரு "மூச்ச்" ஒலித்தது!!!!