முடிவுறாக் கவிதை
சிந்திச் சென்ற
சிறு மழைத்
தூறலில்
சில்லெனக்
குளிர்ந்த
கணத் துளிகள்
சிலாகித்து
நனைந்து நிற்க...
நினைவுப்
புற்றிலிருந்து
நெடுதூரம் பறக்க
சிறகு விரிக்கும்
ஞாபக ஈசல்கள்.
கடந்து போன
கால்தடங்களைத்
தழுவிச் செல்லும்
உப்புக் காற்றின்
ஒவ்வொரு
ஈரத் துப்பலிலும்
இழையோடிச் செல்கிறது
இனம் புரியாத சோகம்.
இருப்பினும்..
எண்ணற்றுக்
கொட்டிக் கிடக்கின்ற
கோடிச் சொற்களிடையே
இறுதியாகச் செப்பிய
அந்த ஓரிரு சொற்களை
ஏதோ ஓர்
நம்பிக்கையோடு
இன்னமும் தேடிக்
கொண்டிருக்கிறது
ஒரு முடிவுறாக்
கவிதையின் எதிர்காலம்

