உலக தாய்மொழி தினம்

தமிழ் என்றும் உயிர்மொழி

தாயினின் சிறந்ததொரு தெய்வமுமில்லை
தாய்மொழியின் மிக்கதொரு மொழியுமில்லை
தமிழின் இனியமொழி தரணியிலில்லை
சங்கம் வளர்த்த சந்தத் தமிழாம்
பங்கம் ஒன்றிலா பாந்த மொழியாம்
தம்மொழியாயின் இறப்பிலும்கூட இனிதென்பர்
தன்னேரிலாத் தமிழ்மொழியோ ஈங்கு
தமிழர்க்கென்றும் உயிர் மொழியாம்

பண்டைப்பெருமை பயனிலை இன்று
பாரினில் பன்மொழி ஆளுமை கண்டோம்
முந்தை வைப்போம் முதுமொழியை
முனைந்து வளர்ப்போம் வினைமொழியாய்
அறிவியலாயினும் ஆன்மிகமாயினும்
வணிகமாயினும் வாழ்வியலாயினும்
கணினியாயினும் கணிதமாயினும்
கலைகளாயினும் கருவிகளாயினும்

இணையமாயினும் இயற்கையாயினும்
இளையோர்க்காயினும் முதியோர்க்காயினும்
எதுவும் இயலும் எம்தமிழில்
என்னும் காலமும் வந்திடுமே
உலகுவாழ்த் தமிழ ரெல்லாம்
உவந்து வளர்ப்பர் வளர்தமிழை
தமிழில் உலக நடப்பறிவோம்
தகவல் யாவும் பகிர்ந்திடுவோம்

பேச்சிலும் எழுத்திலும் தமிழேயாம்
பிழைகள் தவிர்த்த தனித்தரமாம்
புதுப்புது தமிழ்ச்சொல் புனைந்திடுவோம்
பொலிவுடன் தமிழை மெருகிடுவோம்
பலப்பல மொழிவழி இலக்கியங்கள்
படித்திட வகையாய்ப் பெயர்த்திடுவோம்
எம்மொழி கற்றுத் தேறிடினும்
நம்மொழி நமக்குத் தாயன்றோ

வாழும்போதும் வண் தமிழாம்
வானகமேகினும் தண் தமிழாம்
வாழிய தமிழ்மொழி வாழியவே
வாழிய என்றும் உயிர்மொழியாய் !
(உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21)

எழுதியவர் : சபா வடிவேலு (21-Feb-15, 1:04 pm)
பார்வை : 849

மேலே