அறிவியல்

அருந்தமிழ்ப் பாக்களில் அறிவியல்
By -புலவர் கருமலைத் தமிழாழன்
First Published : 15 February 2015 02:58 AM IST (தினமணி நாளிதழில்)
இன்றைய அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பரிணாமக் கோட்பாடு, அணுக்கோட்பாடு, கூர்தலறக் கோட்பாடு போன்றவற்றின் அடிப்படைக் கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. காலத்தால் முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பல்வேறு அறிவியல் கருத்துகள் காணப்படுகின்றன.
இக்காலத் தோல் நோய் மருத்துவர்கள், உள்ளத்தில் ஏற்படும் அழுத்தங்களின் தன்மையைத் தோற்றுவிக்கும் உடலின் பகுதியே "தோல்' என்கிறார்கள். உள்ளத்தின் உணர்வுகளால் தோலின் நிறம் மாறுபடும் என்பதை இன்றைய மருத்துவ அறிஞர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொல்காப்பியர், "தலைவன் பிரிவினால் உள்ளம் கலங்கி நிற்கும் தலைவியின் மேனி இயல்பான நிறத்தை இழக்கிறது' எனக் கூறியுள்ளார்.
""வானம் பார்த்து புலம்புறு காலை'', ""பசியற நிற்றல் பசலை யாதல்'' என்னும் நூற்பாக்களின் வழி, தோல்நிறம் மாறி பசலை பூக்கிறது என்ற உளவியல் மருத்துவக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
கருவுற்ற பெண்களுக்கு உடலிலும், உள்ளத்திலும் வேறுபாடுகள் தோன்றுகின்றன; சில வேட்கைகள் ஏற்படுகின்றன. இவ்வேட்கைப் பெருக்கம் குறிப்பாக, புளிப்புச் சுவையின் மீது ஏற்படுகிறது என்பதை இன்றைய உடற்கூற்று மருத்துவ வல்லுநர்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். இதனைத் தொல்காப்பியர், ""வாயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்'' என உரிச்சொற்களுக்குப் பொருள் கூறும்போது, "வாயா' என்ற சொல்லுக்குப் பொருள் தருகிறார். இச்சொல் கருவுற்ற மகளிர்க்கு ஒருவித மனநிலை மாற்றத்தால் ஏற்படும் வேட்கையைக் குறிக்கிறது.
புறநானூற்றில் குறுங்கோழியூர்கிழார் தமது பாடலில், ""வயவுறு மகளிர் வேட்டு உணின்'' எனப் பாடியுள்ளார். "மன்னா! நின் மண்ணை, கருவுற்ற பெண்டிர் மசக்கையால் உண்பாரேயன்றிப் பகைவர் ஒருபோதும் கைக்கொள்ளார்' என்கிறார்.

""புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே''

எனும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகளில், பெண்கள் கருவுற்ற காலத்தில், பால் சுரப்பிகளால் மார்புகள் பெருக்கமடையும் என்பதையும், புளிச்சுவையை விரும்பி உண்பர் என்பதையும் அறிவியல் நோக்கில் அன்றே புலவர்கள் பாடியுள்ளனர்.
அணுவைப் பிளக்க முடியும் என்பதை இன்றைய அறிவியலார்தான் கண்டுபிடித்தனர் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒüவையார் திருக்குறளின் பெருமையை, ""அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்'' என்று கூறியுள்ளார்.
"அணுவைத் துளைத்து' என்பதால், அணுத்துகள்களைப் பிளக்க முடியும் என்பதைச் சுட்டுவதோடு, அவ்வணுவைப் பிளக்கும்பொழுது ஏழ் கடல்கள் ஒன்றாகப் பொங்கி எழுந்தால் ஏற்படும் சக்தி வெளிப்படும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இது அணுவைப் பிளக்கும்பொழுது அளவிடற்கரிய வெப்பசக்தி வெளிப்படும் என்ற இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றுக்கு அணி செய்கிறது.
தமிழ் இலக்கியத்தில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு அறிவியல் கருத்துகள் உவமைகளாகப் பொதிந்து கிடக்கின்றன. இன்றைய அறிவியல் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து நோக்கும் ஆய்வுகள் பெருகினால், நம் முன்னோரின் அறிவியல் அறிவை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (21-Feb-15, 7:41 pm)
Tanglish : ariviyal
பார்வை : 128

மேலே