அருளும் பொருளும்

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் மற்றும் பெங்களூரு தமிழ்ச்சங்கம்
இணைந்து நடத்தும் திருக்குறள் மாநாடு
கவியரங்கம்
இடம் – பெங்களூரு தமிழ்ச்சங்கம் நாள் – 14 -02 -2015
தலைமை -- ஓவியப் பாவலர் அமுத பாரதி தலைப்பு - அருளும் பொருளும்
கவிதை - பாவலர் கருமலைத்தமிழாழன்

அருளிருந்தால் பொருளில்லை பொருளி ருந்தால்
அருளில்லை எனமுன்னோர் சொன்ன சொல்லின்
கருப்பொருளை நாம்ஆய்ந்து பார்த்தி டாமல்
கண்முன்னே தெரிவதினை உண்மை யென்றோம்
உருவமாக நாய்தன்னைக் காணும் போது
உருதந்த கல்நமக்குத் தெரிவ தில்லை
பருப்பொருளாய்க் கல்தன்னைக் காணும் போது
படைத்திட்ட நாய்உருவம் தெரிவ தில்லை !

அருளிருக்கும் ஒருவரிடம் பொருளி ருந்தால்
அதுதனக்குச் சொந்தமெனப் பதுக்கி டாமல்
தெருவிரக்கும் வறியவன்தான் கேட்கு முன்னே
தேடியவன் பசிபோக்க எடுத்த ளிப்பான்
அருளிருந்தால் பொருளில்லை என்ற கூற்றோ
அடுத்தவர்க்கே எடுத்தெடுத்து அளிப்ப தாலே
அருளுடையோர் பொருளெல்லாம் பிறருக் கன்றி
அவர்க்கில்லை என்பதினை உணர வேண்டும் !

பொருளுக்குப் பொருள்தன்னை அறிந்தி டாமல்
பொருள்சேர்த்து பெட்டிக்குள் முடக்கு கின்றோம்
இருளுக்குள் கண்விரித்துப் பார்த்த போதும்
இருப்பதொன்றும் புலப்படாத தன்மை யாக
பொருள்தன்னை இருளுக்குள் வைப்ப தாலே
பொருள்தன்னின் மதிப்பிழந்து போகு தங்கே
பொருள்வெளியில் காட்சிதந்து நடக்கும் போதே
பொருளுக்கு மதிப்புவரும் பயனும் கிட்டும் !

கடல்கடந்து பொருளீட்டி வருவ தெல்லாம்
கறுப்பாக்கி வெளிநாட்டு வங்கி தன்னில்
முடமாக்கி யாருக்கும் பயனே இன்றி
முகம்மறைத்து வைப்பதற்கா ! பாடு பட்டு
உடலறிவால் பெற்றபொருள் தக்க வர்க்கே
உதவுதற்கே எனக்குறளோன் சொன்ன சொல்லை
திடமாக நாம்நெஞ்சில் பதித்துக் கொண்டால்
திருநாடும் முன்னேறும் நாமும் வாழ்வோம் !

நடமாட்டம் இல்லையென்றால் காலப் போக்கில்
நம்பெயரை மற்றவர்கள் மறத்தல் போல
இடமாற்றம் செய்ததனைத் தெரிவிக் காமல்
இருந்தாலும் பெயர்மறந்து போவ தைப்போல்
நடமாட்டம் இல்லாமல் கறுப்பாய் ஆக்கி
நாம்மறைத்து வைத்தபோது இதுதான் ஆகும்
இடம்மாற்றிப் பதுக்காமல் மற்ற வர்க்கே
ஈந்துபார் வரும்மகிழ்விற் கீடே இல்லை !

அருளில்லை எனில்அவனை இந்த ஞாலம்
அகமில்லான் எனஏசி ஒதுக்கி வைக்கும்
பொருளிருந்தும் ஈயானை இந்த ஞாலம்
பொருளாக மதிக்காமல் ஒதுக்கி வைக்கும்
பொருள்பொதிந்த வாழ்வாய்நாம் வாழ்வ தற்கே
பொருத்தமுடன் நாம்நம்மை மாற்றிக் கொண்டு
அருள்பொதிந்த அகத்தோடு வாழும் போதே
அருங்குறள்சொல் தெய்வத்துள் தெய்வ மாவோம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (21-Feb-15, 7:34 pm)
பார்வை : 206

மேலே