பதட்டம் வேண்டாமே
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர்.அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய்.
பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது.அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய்.
அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது.தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது.
சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் .புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன்,
ஆஹா...புலியின் மாமிசம் என்ன,என்ன சுவை..!இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமேஎன்றது நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது..
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து,
'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்'என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று,
நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.
அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி,"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய்,
பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது
போல பாசாங்கு செய்து கொண்டு, "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
பின் என்ன நடந்திருக்கும் சொல்ல வேண்டியதில்லை,
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது,
எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிட கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப் படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை.
அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.
ஆம்,நண்பர்களே.,
எந்த சூழ்நிலையிலும் அதிலிருந்து தப்ப தன்னம்பிக்கையும்
பதட்டப்படாமல் இருந்தாலே பாதி வெற்றி,
நாம் பயப்படாமல் எதிரில் உள்ளவர்களை
சமாளித்தால் மீதி வெற்றி.
தன்னம்பிக்கை வேண்டும்..
பதட்டம் வேண்டாம்...
பின்பு வெற்றி உங்களுக்கே..,