வளமான சிந்தனை
ஒரு கிராமம், அதில் ஓர் இளைஞன், அவனுக்கு நிறைய உழைக்க வேண்டும் என்று ஆசை. எனவே அவன் ஓர் முனிவரிடம் சென்று தான் நிறைய உழைக்கத் தேவையான உடல் மற்றும் மன வலிமையை எப்படி வளர்ப்பது என்றும் தனக்கு உதவுமாறும் வேண்டினான்.
உடனே முனிவர் அவனுக்கு ஓர் குட்டி பூதத்தைப் பரிசாகக் கொடுத்து, அவன் காதில் ஓர் இரகசியம் கூறினார். அந்த இரகசியம், “நீ இந்த பூதத்திற்கு தினமும் வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், இது அனைத்தையும் தட்டாமல் செய்து கொடுக்கும்,
ஆனால் நீ வேலைகள் கொடுப்பதை நிறுத்திவிட்டால்
இது உன்னை விழுங்கிவிடும்” என்று கூறி அனுப்பினார்.
அவனும் தினம் தினம் அந்த பூதத்திற்கு வேலைகளைக் கொடுத்தான். ஆடம்பரமான வீடு, பணம், நகை, விவசாயம் என அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டது அந்த குட்டி பூதம். அவனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட அவன் எந்த வேலையையும் பூதத்திற்குத் தரவில்லை.
முன்பு முனிவர் கூறியதுபோலவே அது அவனை விழுங்க நெருங்கி வந்தது. உடனே அந்த முனிவரிடம் ஓடிச்சென்று காலில் விழுந்து உதவி கேட்டான்.பின், மறுபடியும் அவர், இளைஞனின் காதில் ஓர் இரகசியம் சொன்னார். அதன்படி அவன் பூதத்திடம் ஓர் பெரிய இரும்புத்தூண் ஒன்றை உருவாக்கச் சொன்னான்.
மிக உயரமான அந்தத் தூணை அந்தக் குட்டி பூதம் தினம் தினம் ஏறி இறங்க வேண்டும், அவன் அழைக்கும்போது மட்டும் அது வந்து உதவி செய்ய வேண்டும். மிக அழகான யோசனை…
இந்தக் கற்பனைக் கதையின் கருத்து..
நம் வளமான சிந்தனை என்பது குட்டி பூதம் போன்றது.
தினம் தினம் அதற்கு வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். இல்லையென்றால் அது தவறான பாதையில் சென்று தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நம்மையே விழுங்கிவிடும்.
வளமான சிந்தனை என்ற முக்கிய பூதம் நம்முள் எப்போதும் இருக்கிறது. அதைத் தக்க தருணத்தில் நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஆம்,நண்பர்களே.,
வளமான சிந்தனையுடன் கட்டுக்கோப்பான முயற்சி இருந்தால் தொடர்ந்து நாம் வாழ்க்கையில் முன்னேறமுடியும்.