வரலாற்று யாத்திரைகள் - 16 ஒரு பக்கக் கதைகள் - மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்

எத்தனையோ வரலாறுகள் படித்து இருப்பீர்கள்…ஆனால் வெள்ளையத் தேவன் பற்றிய வரலாற்றை அறிந்ததுண்டோ ??? யார் இந்த வெள்ளையத்தேவன் ??? வீரத்திற்கு பெயர் போன கட்டபொம்மனின் வீரத்தளபதி…..இவர் போன்ற வீரத்திருமகனின் மரணத்தைப்பற்றி படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது….இவரைப்பற்றிய சிறுகுறிப்பு காண்போம்…

சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்புகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன்தான் வெள்ளையத்தேவன் என சிலர் கூறுகின்றனர். வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே சிறந்த வீரம் கொண்டவர். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் போருக்கு செல்லும் முன் சேவல் போர் நடத்துவாராம். அதில் அவர் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாதாம். ஒரு நாள் எந்த போரிலும் தோற்காத அவரது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால் , வெள்ளையருக்கு எதிராக நடக்க இருந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் வெள்ளையத்தேவன் எதையும் பொருட்படுத்தாது போர்களத்தை அடைந்தார்.

1799 செப்டம்பர் 1-ஆம் தேதி , திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயத்தில் ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், சாமர்த்தியமாக பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டான். பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் கர்னல் பானர்மேன். ஆனால் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்..அச்சூழ்நிலையிலும் அஞ்சவில்லை நம் தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத்தேவன். ஆங்கிலேயர் படையை அவன் தாக்கியதைக் கண்டு அவர்கள் பயந்துபின்வாங்கினார்கள். ஆனால் அவர்களது பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் சொல்லமுடியாது. நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்து தாக்கினார்கள்.

ஆனால், அப்பொழுதும் அயராமல் தொடர்ந்து எதிரிகளை அவர் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே இருந்தார் வெள்ளையத்தேவன்.இச்செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி விரைந்து வந்தனர்.. அப்போது அவர்கள் கண்ட அக்காட்சி அவர்கள் நெஞ்சை பதைபதைத்தது…அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலுடன் இருந்த வெள்ளையத்தேவன், காட்டாற்று வெள்ளம் போல் வழியும் தன் குருதியையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக கட்டபொம்மனிடம் ஒப்படைத்தான். உணர்ச்சியின் உச்சத்தில் பொங்கிய கட்டபொம்மன் சொல்ல வார்த்தைகளின்றி இரத்த கண்ணீரில் வெள்ளையத்தேவனை ஆரத்தளுவிக்கொண்டு அவனின் வீரத்தை புகழ்ந்தான்…

” இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது…! ”

எனக்கூறி சிறிது சிறிதாய் பிரியும் வெள்ளையத்தேவனின் உயிரைக்காப்பாற்ற தன் கைகளாளே அவனை ஏந்தி வைத்தியரிடம் அழைத்துச் சென்று , பலப்போரட்டங்களுக்கு பின் வெள்ளையத்தேவனை காப்பாற்றினான் கட்டபொம்மன். வெள்ளையத்தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கட்டபொம்மன் தன் இறுதி வாழ்நாள் வரை வெள்ளையத்தேவனை ஆருயிர் நண்பனாக ஏற்று நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தான் … இவர்களது அசைக்க முடியாத நட்பின் கூட்டணியால் வெள்ளையர்களின் பல சதிகள் முடக்கப்பட்டு , முறிக்கப்பட்டு அவர்கள் பாஞ்சாலக்குறிச்சியை விட்டு விரட்டப்பட்டனர்..


உண்மையில் நடந்தவை :
-----------------------------------------

நாட்டைக்காக்க போரிட்டுக்கொண்டே இருந்தான் வெள்ளையத்தேவன். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்து தாக்கினார்கள்.ஆனால், அப்பொழுதும் அயராமல் தொடர்ந்து எதிரிகளை அவர் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே இருந்தார் வெள்ளையத்தேவன்.
இச்செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி விரைந்து வந்தனர்.. அப்போது. அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலுடன் இருந்த வெள்ளையத்தேவன், காட்டாற்று வெள்ளம் போல் வழியும் தன் குருதியையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக கட்டபொம்மனிடம் ஒப்படைத்து அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.
துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட இம்மாவீரனைப் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது சற்று வருத்தம் தான்.


இன்னும் சிலக்குறிப்பு அவரைப்பற்றி :
-------------------------------------------------------------

வெள்ளையத்தேவனைப் போன்றே அவர் குதிரையும் அவரைப்போல் வீரம் பொருந்தியே காணப்பட்டது,தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.

"ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை...'' என அக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.



----------------------------------------------------------முற்றும்--------------------------------------------------------------


குறிப்பு:
-----------
” இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச் சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது
வீரனைச் சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது…! ”

இக்கவி அறிவுமதிக்கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டது…

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (25-Feb-15, 8:16 pm)
பார்வை : 1398

மேலே