செம்பு

முதன் முதலாக ஒரு கதையில் தான் செம்பு எனக்கு அறிமுகமானது. அது சிறுவர்மலரில் வந்த கதை. பார்வதி அத்தை தான் படித்துக்காட்டியது, எனக்கும் தம்புவுக்கும் ! தம்புவுக்கு சிறுவர் மலர் இல்லையென்றால் சோறு இறங்காது. சிறுவர் மலரின் கதைகளை வாசித்தபடியே அத்தை அவனுக்குச் சோறு ஊட்டும். பக்கத்தில் இருக்கும் எனக்கும் உருண்டை பிடித்துக் கையில் வைக்கும். தம்பு என் அத்தை பையன். தம்பு போல் எனக்குச் சோறு திங்கும்போது கண்டிப்பாகச் சிறுவர் மலர் வேண்டும் என்றில்லை. இருந்தால் நன்றாக இருக்கும். செம்பை எனக்கு அறிமுகப்படுத்திய அந்தக் கதை பிசிறாக கொஞ்சம் போல ஞாபகம் இருக்கிறது. எவனோ ஒருவனுக்கு ஏதோவொரு வரம் கிடைக்கிறது. அதை வைத்து அவன் எங்கோ போய்க்கொண்டிருக்கும்போது வழியில் அவனுக்கு முதலில் செம்புக்காசுகள் கிடைக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு இன்னும் கொஞ்ச தூரம் போகிறான், அடுத்து வெள்ளிக்காசுகள் கிடைக்கின்றன. அவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, இன்னுங்கொஞ்ச தொலைவு நடக்கிறான். அடுத்து தங்கக்காசுகள் ! அவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி, மேலும் பேராசைப்பட்டு இன்னுங்கொஞ்ச தொலைவு போய் எதிலேயோ வசமாக அகப்பட்டுக் கொள்கிறான் என்பது போல முடியும் அந்தக்கதைதான் செம்பை எனக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே தங்கமும் வெள்ளியும் எனக்கு அறிமுகமானவைகள். தம்பு அந்தக்காலத்தில் வெள்ளி " அரணாக்கயிறு " அணிந்திருந்ததாக ஞாபகம் ! எனக்கு அப்போது வெள்ளி பிடிக்காது. அதன் ஒருமாதிரியான சாம்பல் நிறத்தை என் அழகியல் ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளியை விட அதிகம் மினுங்கும், கருக்கவே கருக்காத, துருப்பிடிக்காத எவர் சிலவர் பாத்திரங்களைக் காட்டிலும் வெள்ளி எம்மாத்திரம் உயர்ந்தது என்கிற லாஜிக் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டு இருந்ததால் நான் வெள்ளியின் கட்சியில் இல்லை. அடுத்து தங்கம் ! தங்கத்தின் மினுங்கும் மஞ்சள், உள்ளுக்குள் ரசமான கிளர்ச்சி ஏற்படுத்தினாலும், அதன் விலையுயர்ந்த தன்மை என்னை அதனிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. இவற்றிற்கு மாற்றாக நான் இரும்பின் கட்சியில் கொஞ்சநாள் இருந்தேன். ஆனால் இரும்பின் துருப்பிடிக்குந்தன்மை காரணமாக அக்கட்சியில் இருந்தும் ஒருநாள் வெளிநடப்புச் செய்தேன்.

பித்தளையின் பக்கம் நான் போகக்கூடாது என்று தீர்மானித்திருந்தேன். காரணம் ஆயா ஒரு பித்தளைக் குண்டா வைத்திருந்தது. வெந்நீர் வைக்க அதனைப் பயன்படுத்தும். அது ஒருமாதிரி அழுக்கு மஞ்சளில் கருப்பாக இருக்கும். எனக்குப் பிடிக்கவில்லை. இந்த உலோகங்களுக்கு மாற்றாக வேறு ஒரு உலோகத்தின் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்திருந்த தருணத்தில்தான் அந்தக் கதையின் மூலமாக செம்பு எனக்கு அறிமுகமானது. அக்கதையில் வந்த செம்புக்காசுகள், வெள்ளி, தங்கக்காசுகளை விட விலைமதிப்புக் குறைவாக இருந்தாலும் செம்பு என்கிற சொல்லே எனக்கு ஒருவிதக் கவர்ச்சியாக இருந்தது. செம்பு என்றால் வாய் இனிப்பது போல இருந்தது. " செம்புக்காசு எப்படி இருக்கும் அத்த ? " பார்வதி அத்தையிடம் ஆவலோடு கேட்டேன். " அது எல்லாம் அந்தக்காலத்துல இருந்தது ...இப்ப இல்ல " என்றது அத்தை.

கதை கேட்டுவிட்டு ஓடிப்போய் ஆயாவிடம், " ஆயா செம்பு எப்படி இருக்கும் ? " என்றேன். ஆயா, " சொம்பா ? " என்றது என்னிடமிருந்து செம்பு பற்றிய வினாவை எதிர்பார்க்காமல். " சொம்பு இல்ல ஆயா ......செம்பு ,..,,,செம்புக்காசு .......அந்தக் கதையில வருமே " என்றேன். கொஞ்சம் யோசித்த ஆயா " அங்க அட்டாலி மேல ஒரு செம்புப்பாத்திரம் கெடக்கு .......பொறவு எடுத்துக் காட்டறேன் " என்றது. " எனக்கு இப்பவே பாக்கணும் ......எடுத்துக் காட்டு " என்று அடம் பிடித்தேன். ஆயா ஒரு ஸ்டூல் போட்டு ஏறி அட்டாலி மேல் இருந்த செம்புக் குண்டானை எடுத்த போது செந்தேள் ஒன்று சொத் எனக் கீழே விழுந்தது. ஆயா அதனை அந்தச்செம்புக் குண்டானாலேயே அடித்து காலி பண்ணியது. செம்பு எனக்கு அறிமுகமாவதற்கு முன்னாலேயே கிடைத்த தேள் தரிசனம் செம்பின் மீதான என் கவர்ச்சிக்குச் சற்றும் குந்தகம் விளைவிப்பதாக அமையவில்லை.

கொஞ்சம் கருத்து பச்சை பிடித்துப் போயிருந்தாலும் அந்தச் செம்புக் குண்டானின் ஆரஞ்சுச் சிவப்பு வண்ணம் எனக்குப் பிடித்திருந்தது. அதே ஆரஞ்சுச் சிவப்பு வண்ணத்தில் அந்தக் கதையில் வந்த செம்புக்காசுகளைக் கற்பனை செய்து மகிழ்ந்தேன். " ஆயா, அட்டாலி மேல செம்புக் காசு இருக்கா ? " என்றேன். " செம்புக் காசு எல்லாம் இல்ல . அதெல்லாம் அந்தக் காலத்துலதான் ......" என்றதும் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இப்போது இல்லாமல் போய் விட்ட அந்தச் செம்புக் காசுகளை என்றாவது ஒருநாள் அக்குப்புத்திரன் கொண்டுவந்து கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் தூங்கிப்போனேன். அக்குப்புத்திரன் எனக்கு ஆயா அறிமுகப்படுத்திய சூப்பர் மேன் ! அவன் நல்லவன், சாகசங்கள் நிறைந்தவன் , குறிப்பாக சிறுவர்களின் ஹீரோ !

மறுநாள் அந்தச் செம்புக் குண்டானைக் கழுவி பளபளபளப்பாக வைத்திருந்தது ஆயா. அந்தக் குண்டானை எடுத்துத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தேன். அந்தக் குண்டான் சற்றுப் பெரிதாய் இருந்ததால் அதை என்னுடனே எப்போதும் வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. எப்போதும் என்னுடனே இருக்கும்படியான செம்பு ஒன்று எனக்குத் தேவையாக இருந்தது. அப்போதுதான் கணேஷ் மாமா ஒரு ரஜினி படத்துக்கு என்னைக் கூட்டிப் போனார் ! ரஜினியின் கையில் இருந்த அந்த வளையத்தைப் பார்த்ததும் என் கண்கள் டாலடித்தன. " அது, செம்பு தானே மாமா ? " என்றேன். மாமா , " ஆமா " என்றார். அந்த வளையத்தைப் போட்டுக்கொண்டிருப்பதால்தான் ரஜினி அனாயசமாக பத்துப் பேரை அடிக்கிறார், பறந்து பறந்து அடிக்கிறார், என்று ஆணித்தரமாக நம்பினேன். வீரத்திற்கும், செம்புவிற்கும் ஒரு தொடர்பு இருந்தேயாகவேண்டும் என்று என் உள்மனது சொல்லிக்கொண்டிருந்தது. அதுபோன்ற ஒரு செம்பு வளையத்தை வாங்கிக் கையில் மாட்டிக்கொண்டால் பக்கத்து வீட்டு குண்டு பிரகாஷை மல்யுத்தத்தில் வென்றுவிடலாம் என்று நினைத்தேன். பக்கத்து வீட்டு குண்டு பிரகாஷ் அப்போது எனக்கு வில்லனாகத் தெரிந்தான். அப்போதைய சினிமாக்களில் வில்லன்கள் யாவரும் குண்டாகவே இருந்ததால், குண்டாக இருந்த பிரகாஷ் எனக்கு வில்லனாகத் தெரிந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

சும்மா வெள்ளோட்டம் பார்ப்பது போல நானும் தம்புவும் பிரகாஷிடம் ஒரு நாள் சண்டைப் போட்டி வைத்திருந்தோம். பிரகாஷ் தம்புவின் பவுட்டில் ஓங்கிக் குத்தியதில் பல் ஒன்று இடம் பெயர்ந்து தம்பு ஓ வென்று அழத் தொடங்கியிருந்தான். தம்புவின் வாய் வெற்றிலை பாக்கு போட்டுகொண்டுவிட்டது. நான் வீராவேசம் வந்தவனைப் போல பிரகாஷின் மீது பாய்ந்தேன். பிரகாஷ் என் இரு கைகளையும் பற்றி, தன் முழங்காலை என் அடிவயிற்றில் நெக் என்று செலுத்தினான். நல்ல ஊமை அடி ! அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு அழுதேன். பிரகாஷ் ஓடிவிட்டான். பார்வதி அத்தை இதற்காக பிரகாஷின் அம்மாவிடம் சண்டைக்குப் போனது. அதன் பிறகு நானும், தம்புவும் பிரகாஷிடம் டூ விட்டு விட்டோம். ஆனாலும் என்றாவது ஒருநாள் பிரகாஷைப் பழிக்குப் பழி வாங்குவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம்.

இந்தச் சமயத்தில் தான் செம்புவிற்கும் வீரத்திற்கும் இருந்த தொடர்பு " ஊர்க்காவலன் ரஜினி " படத்தின் மூலம் எனக்குத் தெரியவந்தது. அது போன்றதொரு செம்புவளையத்தை வாங்கிக் கையில் மாட்டிக்கொண்டு பிரகாஷின் பவுட்டைப் பெயர்க்க வேண்டுமென்பது அப்போதைய வாழ்நாள் லட்சியமாக இருந்தது. செம்பு வளையம் வாங்கித்தரச் சொல்லி ஆயாவிடம் அழுதேன். அடுத்தவாரம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்குப் போகும்போது வாங்கித்தருவதாக ஆயா சொல்லியது.

வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்கு பல்லடத்தில் இருந்து பஸ்சில்தான் போனோம். கோவிலில் நல்ல கூட்டம். அதிகாலையிலேயே கிளம்பி விட்டதால் காலை உணவுக்கு இட்டிலியும், " செகப்பு சட்னியும் " கொண்டு போயிருந்தோம், பீட்ரூட் சட்னியைத் தான் நாங்கள் அந்நாளில் செகப்பு சட்னி என்று வழங்கிவந்தோம். மதியத்துக்கு புளி சோறும், உருளைக்கிழங்கு கத்தரிக்காயும் ! கோயில் மரத்தடியில் ஒரு துண்டை விரித்துப்போட்டு அதில் நான், ஆயா, அத்தை, நடராசு மாமா, பப்பி அக்கா, சாந்தி அக்கா, தம்பு, மயில் மாமா, கணேஷ் மாமா என எல்லாரும் அமர்ந்து உணவருந்தினோம் ! அந்நாட்களில் ஆயா வீடே எனக்கு அம்மா வீடாக இருந்தது. ஆயாவே எனக்கு அம்மாவாக இருந்தாள். ஆயா என் அம்மாவின் அம்மா ! அம்மாப்பாட்டி என்று சில சமயம் நான் கூப்பிடுவதுண்டு. ஆனால் பெரும்பாலும் செல்லமாக ஆயாதான் ! நேரஞ்சரியில்லை என ஈரோட்டில் இருந்து என் அம்மா அப்பா பல்லடத்து ஆயா வீட்டில் நான்கு வருடம் இருக்கும்படி விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். எனக்கு அப்போதெல்லாம் யாரையும் அம்மாவாகப் பார்க்க முடிந்தது. சிறுவர்மலர் படித்துக் கொண்டே சோறு உருண்டை பிடித்துத் தரும்போது பார்வதி அத்தை எனக்கு அம்மாவாகிவிடுவாள், " விக்ரம் " படத்தின் கதை சொல்லும்போது பக்கத்து வீட்டு அலமேலு அக்கா எனக்கு அம்மாவாகி விடுவாள், தூரி கட்டி ஆட்டிவிடும்போது சாந்தியக்கா எனக்கு அம்மாவாகிவிடுவாள் ! ஆனால்,அம்மா ஊருக்கு வந்து கிளம்பும்போதெல்லாம் என் அழுகை அடங்க இரண்டு நாட்களாகும் !

களிமண் போலிருந்த வாழைத் தோட்டத்து அய்யன் பிரசாதத்தை ஆயா என் வாயில் திணித்தது. தம்பு, மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு சாவி கொடுத்தால் ஓடும் கார் பொம்மை வாங்கியிருந்தான். பப்பியக்கா சோப்பு மொட்லிகள் விடும் கலர்த்தண்ணீர் வாங்கிக்கொண்டது. கொஞ்சம் வளர்ந்திருந்த சாந்தியக்கா ஜடைவில்லை வாங்கிக்கொண்டது. நான் செம்புவளையம் வாங்கிக்கொண்டேன். நல்ல கனமாக ஆரஞ்சுச் சிவப்பு மினுமினுப்பில், ஜில்லென்று அது என் கையை ஸ்பரிசித்த போது ஒருநிமிடம் ஊர்க்காவலன் ரஜினியாகவே என்னை உணர்ந்தேன். உடம்பில் புது வீரியம் குடிகொண்டது போன்ற கிளர்ச்சி . பஸ்ஸில் போகும்போது அந்தச் செம்பு வளையத்தையே பார்த்துக்கொண்டு வந்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், சாலையில் போய்க்கொண்டிருந்த பிரகாஷை " டேய் .....தடியா " என்றேன். அவன் ஆக்ரோஷமாய் என் அருகில் வந்து, முன்னை மாதிரியே என் கைகளைப் பற்றிக்கொண்டான் ! பழையபடியே தன் முழங்காலை என் அடிவாயிற்றை நோக்கிச் செலுத்த வந்தான், டக் என்று என் முழங்காலால் தடுத்தேன். எதிர்பாரா இந்த எதிர்த்தாக்குதலில் பிரகாஷ் திகைத்தான் ! செம்புவளையம் கொடுத்த தைரியத்தில் பிரகாஷை அப்படியே கீழே சரித்தேன். இருவரும் புழுதியில் உருண்டோம். ஆயாதான் வந்து விலக்கியது. தர தரவென்று வீட்டுக்குள் அழைத்து வந்து சுளீர் சுளீர் என்று முதுகில் இரண்டு போட்டது. நான் அழவில்லை. கையில்தான் செம்பு வளையம் இருக்கிறதே !

அதன் பிறகு ஒருநாள் அந்தச் செம்பு வளையத்தைத் தொலைத்து விட்டேன். ராமசாமி சாரிடம் புகார் கொடுத்தும், பள்ளிக்கூடம் பூரா தேடியும் அது அகப்படவில்லை. ஏதோவொன்றை இழந்தது போலிருந்தது. பிரகாஷைக் கண்டால் பயமாக இருந்தது. மறுபடியும் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குப் போகும்போது வாங்கித்தருவதாக ஆயா வாக்கு கொடுத்தது. அதுவரை ஒயர்களில் இருந்த செம்புக்கம்பியைத் தற்காலிகமாக கையில் சுற்றிக்கொண்டேன்.

எங்கள் வீட்டில் ஒரு செம்புக்குடம் இருந்தது. வெள்ளிகிழமையானால் அம்மா அதை உப்பு புளி போட்டு பளிச்சென்று விளக்கிவைப்பாள். வீட்டில் பூஜை செய்யும்போது ஒரு குட்டி செம்புக் கிண்ணத்தை தீர்த்தம் போடுவதற்காக அப்பா வைத்திருப்பார். அதன்பிறகு கொஞ்சநாள் ஆதிபராசக்தி செம்பு டாலர்கள் மீது மோகம் கொண்டலைந்தேன். சமீபத்தில் நண்பர்களுடன் திருத்தணி போயிருந்த போது, செம்பு மோதிரம், செம்பு டாலர், செம்புக்காப்பு என வாங்கி அணிந்துகொண்ட என்னை அவர்கள் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனாலும், உடம்பில் கொஞ்சம் விறுவிறு என்றுதான் இருந்தது.

எழுதியவர் : குருச்சந்திரன் (26-Feb-15, 4:55 am)
Tanglish : sembu
பார்வை : 695

மேலே