ஒரு மாயமற்ற பொழுதில் சில கேள்விக்கனல்கள்
...ஒரு மாயமற்ற பொழுதில்
சில கேள்விக்கனல்கள்...
ஈரம் கசியும்
பிசுபிசுப்போடு
ஒரு நாளேனும்
இருந்ததுண்டா?
எம் தனிமையின்
தாழ்ப்பாளை திறக்க
யாருக்கேனும்
திராணியுண்டா?
உரசப்படும்
கசடு கணங்களில்
சீழ்வடியும் சொற்கள்
நாநுனித் தழுவி
உதடு வறண்டதுண்டா?
அங்கபாகம் ஒவ்வொன்றும்
அழகென எழுதிய
பேனாமுனையுடைத்திட
பேரெரிச்சல் பிறந்ததுண்டா?
கழுத்துவரை தடவி
தடுக்கிவிழும் விழிகளை
பிடுங்கியெறிய
ஒரு உருவமற்ற கை
எத்தனித்ததுண்டா?
நிமிர்ந்த பாகந்தன்னை
அருவமென காணாது
கண்கலந்து காதல் கசியும்
ஒருவனை மனம்
தேடியதுண்டா?
இதோ என்
அழகெல்லாம்
வேள்விக்கனல்கள்.
அதோ என்
வானெல்லாம்
கேள்விக்குறிகள்.
நிழல் நிலா
மலர் உலா
நிசக் கனா
இதழ் பலா
ஆம்
இச் சோடித்த
வார்த்தைகளின்
சொந்தக்காரரெல்லாம்
அலட்டிக்கொள்வார்
பெண்மையை எழுதி
கிழித்துத் தள்ளுவாராம்..
--கனா காண்பவன்