புருவகாலம் - 8 உணவுக்காய் ஒரு தொழில் பழகி
நவீன சமூக கட்டமைப்பில் சிக்கி பழமையையும், பசுமையையும் இழந்துவிட்ட நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு அழகான ஆரம்பம் இருந்திருக்கும். நம் நினைவுகளை கிறங்கடிக்கிற ஒரு குளிர்ந்த காற்று வீசியிருக்கும். நம்மை மறந்துவிட்டு லயிக்கிற ஒரு சுகம் இருந்திருக்கும். ஆனால், நாம் ஏன் அதையெல்லாம் அடிக்கடி புரட்டிப் பார்ப்பதில்லை என்றுதான் புரியவில்லை எனக்கும் தெரியவில்லை.
பல கோடி ஆண்டுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியாக சுற்றிக் கொண்டிருக்கும் பூமியின் நெருப்பு பக்கங்களை நினைக்கையில் ஏனோ எனக்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறது மனம். அந்த வரலாறு எங்கிருந்து ஆரம்பித்தது, யார் எனக்கான வழியை பதியம் போட்டுவிட்டு சென்றது? இப்படியாக ஆயிரம் கேள்விகள்.
நம் எல்லோருக்குமான வரலாறு எங்கேயோ ஒரு இடம் பெயர்வதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது போலும். இப்போதெல்லாம் என் முதியோர்கள் வேறொரு பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் என்கிற சிந்தனை என்னை யோசிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. எந்த ஆண்டில் அவர்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு புறப்பட்டார்கள்?. அவர்களின் பயணம் குடும்பத்தோடு கால்நடையாய் அமைத்திருக்குமா?. பயணம்தான் அவர்களின் அறிவாக இருந்திருக்குமா? வாழவேண்டும் என்கிற வேட்கைதான் அவர்களை எங்கெல்லாமோ அலையத் தூண்டியிருக்கும் போல.
போகிற போக்கில் பல்வேறு விதமான மன்வகைகளை அவர்கள் சந்திக்கவேண்டி -யிருந்திருக்கும். மழைகளை கடந்திருப்பார்கள். வெயிலை அள்ளி சுமந்திருப்பார்கள். வரப்புகலேங்கும் திரிந்திருப்பார்கள். பாதம் வெடித்து அழுதிருக்கும்.
நாடோடி வாழ்க்கை அவர்களுக்கு அலைச்சலை தந்திருந்தாலும் நிம்மதி அங்கே இருந்திருக்கும்.
அவர்கள் அந்த பகுதியை விட்டு புறப்படும் போது அந்த நிலம் மழையின்றி வறண்டு கிடந்ததா? அதனால்தானவர்கள் இடம்பெயர்ந்தனரா? அல்லது கால்நடைகளை காப்பாற்றி கொள்ளும் பொருட்டு இடம் பெயர நேர்ந்ததா? அல்லது ஏதேனும் கலவரம் நிகழ்ந்து இருப்பிடம் தேடி உயிரை பிடித்துக் கொண்டு ஓடி வந்தவர்களா? எதுவும் தெரியவில்லை.
எந்த சூழல் அவர்களை வேறு இடம் நோக்கி செல்ல பணித்திருக்கும்?. இரவுகளின் மௌனத்தில் இந்த கேள்விகள் விழித்துக் கொண்டு என்னை இம்சிக்க ஆரம்பித்துவிடுகின்றன.
பஞ்சமும், வறுமையும் அவர்களை வாட்டி வதைத்திருக்கும். வெப்பமும் வேதனையும் அவர்களை வருத்தம் கொள்ள செய்திருக்கும். இல்லையெனில் அவர்கள் அந்த பகுதியை விட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? அவர்கள் அந்த பகுதியை விட்டு வந்தபோது இன்னும் எத்தனை குடும்பங்கள் அவர்களோடு வந்திருக்கும்? பல்வேறு குடும்பகள் இடம் பெயர்ந்ததாக சொல்லப்படுகிறதே. அவர்களில் சிலர் கருணாகர நல்லூரிலும் சிலர் வீராணநல்லூரிலும் தங்கள் வம்சத்தை விருத்தியடைய செய்தார்கள் என்கிற செய்தி பரவலாக கிடைக்கிறதே. அந்த வாரிசுகளின் சாதாரண பேச்சுகளில் கூட அவை தென்படுகிறதே. அப்படியென்றால், அவர்கள் ஒரு கூட்டமாகத்தான் நகர்ந்திருக்கிறார்களா?. அதில் மாற்றமில்லை. ஆனால், ஒரு சந்தேகமிருக்கிறது. ஒரு வேலை அவர்களும் சாதியத்தால் தாக்கப்பட்டிருப்பார்களோ? இருக்கலாம்...நம் நாடு சாதியை தானே தின்று கொண்டிருக்கிறது.
அவர்கள் ஏன் இந்த காட்டு பகுதியை தேர்ந்தெடுத்தார்கள்? அமைதி இங்குதான் கிடைக்கும் என்கிற நம்பிக்கையினாலா? நீர் நிலைகளும், உணவும் அருகருகே கிடைத்ததாலா? தங்களுக்கு சரியான பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், கால்நடைகளின் மேய்ச்சலுக்கான போதிய பசுமைக்காகவும் இருந்திருக்குமோ? ஒருவேளை கரிசல் மண் கலந்தோடும் வடவாற்றின் மௌனம் அவர்களை இங்கே தங்க சொல்லி கண் சிமிட்டி அழைத்திருக்குமோ? இருக்கலாம்.. இல்லாமலிருக்குமா? வடவாரின் அழகும் அது தரும் ஆனந்தமும் அதில் நீந்தி களித்த எங்களுக்கல்லவா தெரியும்.
வீராணம் திட்டத்துக்காய் 2000 ஆவது ஆண்டுகளுக்கு பிறகு அதில் கான்கிரீட் தளமமைத்த அரசுக்கா தெரியும்? நீர்நிலைகள்தானே நாகரிகம் வளர காரணமாக இருக்கின்றன. அதனால் அதுவாகத்தான் இருந்திருக்கும் என மனம் உழன்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இல்லாமல் ஒரு இடத்தை விட்டு எளிதில் யாராலும் புறப்பட முடியாது. சொந்த இடத்தை விட்டு ஒரு மனிதன் பிரிவது அத்தனை சாதாரணமானதா என்ன?
அவர்கள் வசித்த பகுதியும் காடு சார்ந்ததுதான். ஆனால், அது செம்மண் பிரதேசம். மணல் காணாத தரைகளுக்குள்ளே மலைவளம் தெரியும் பூமி அது. பலாவும், முந்திரியும், மாவும் கடலையும் விளைந்து கொழித்த பூமி. பூமியை தோண்டி நீரெடுத்து குடிக்க அத்தனை சுவை. பதநீர் குடிச்சா போல. அருகிலிருந்த நீர்நிலைகளில் அத்தனை குளிர்ச்சி. அங்கே தாமரை தலைநீட்டி நிற்கும் அழகு. அந்த இடத்தை விட்டு புறப்பட எண்ணியிருக்கிறார்கள். என்ன காரணமாய் இருந்திருக்கும்? இடம் பெயர முக்கிய காரணமாய் உணவையும் இருப்பிடத்தையும் இன்னபிற அத்யாதிகளையும் தானே சொல்லமுடியும். அவை உயிர் வாழ அவசியமானவவை அல்லவோ.
தமக்கு கிடைத்த கொஞ்சம் பகுதிகளில் காடுகளை சீர்செய்து குடிசைகளால் நிரப்பிக் கொண்டு வாழ்ந்துவிட முடிந்தது அவர்களால். காட்டுப் பூச்சியினங்களை சமாளித்தார்கள். தாவரங்களோடு இருந்த தொடர்பு மூலிகை மனத்தை கொடுத்தது. அது மருத்துவத்தை எந்த கல்லூரிக்கும் செல்லாமலேயே கற்று தந்தது. அந்த சமயத்தில் விவசாயம் முக்கிய பயிரானது. ஆடுகளும் மாடுகளும் அன்றாடம் பழகிப்போன நிலையிலிருந்தன. இரவில் விளக்கொளியில் உண்டு கழிக்கும் நேரத்தில் உணவுக்காய் நாய்கள் வாசல்களில் படுத்துக் கிடந்தன. தெருவில் யாரேனும் நடந்து சென்றால் அவை உடனே ஓடி சென்று உணவுக்காய் கொஞ்சம் குரைத்தன. சேவல்களும் பெட்டைகளும் கீரிகளுக்கு பயந்து கூடுகளுக்குள் பதுங்கி கிடந்தன. இவை ஒவ்வொரு விடியலையும் எங்களுக்கு அறிவித்தபடி இருந்தன. கோழி முட்டைகளை எல்லாம் மண் பானைகளிலும் மணல் சுமந்த கூடைகளிலும் எடுத்து வைத்திருந்தோம். இவையெல்லாம் மேல்நாட்டு நாகரிகத்தின் விளைவால் அடுத்தடுத்த தலைமுறை கடந்து இதோ எங்களில் வந்து நிற்கிறது எங்கள் மூதாதையர் வரலாறு.
உணவுக்காய் ஒரு தொழில் பழகி உணவுக்காய் ஒரு பயிர் செய்து உணவுக்காய் ஆநிரை கொண்டு உணவுக்காய் அலைந்து திரிந்து வாழ்ந்தாகிவிட்டது. இனியாவது உயர்வுக்காய் வாழலாம் என நினைத்திருக்கலாம். மழைக் கடவுள், மண் கடவுள், மரம் கடவுள், சூரியன் கடவுள், சுற்றி இருக்கிற யாவும் கடவுள், இப்படி பார்க்கிற ஒவ்வொன்றையும் கடவுளாக கருதியாகி விட்டது. இவைகள் நம்மை காக்கும் காவல் தெய்வம் என வாழ்ந்த வாழ்க்கை அது. நீர் நிலைகள் உயிர்களை வாழவைக்கின்றன. நீர் நிலைதான் வரலாற்றை எழுதுகின்றன. நீர்தான் நாகரிகத்தை விதைக்கின்றன. இதனால்தான் நாகரிகம் ஆற்றின் படுகைகளில் வளர்ந்ததாக காலம் பதிவு செய்கிறது.
எங்களின் கிராமத்தை ஒட்டிய ஏரிக்கரையில் ஈரம் படிந்த காட்டாமணி காடுகளில், ஊமச்சி பொறுக்கிய பாட்டிகளின் வெற்றிலை காரை படிந்த பற்களின் இடுக்குகளில் எங்களுக்கான வரலாறு கொஞ்சம் இருந்தன. அவை, வாய்க்கால்களின் ஊடே வரப்பேறி படர்ந்திருக்கும் வெள்ளைக்கீரை குழம்பாகும் போதும், வளை குழியிலிருந்து வலுக்கட்டாயமாய் பிடிக்கப்பட்ட நண்டும், ஏரிக் கழிமுகத்தில் முதிர்ப் பெண்களின் முந்தானையில் சிக்கிய மீன் குஞ்சுகளும் எங்களுக்கான சாசனத்தை எழுதிச் செல்கின்றன. வம்சம் வம்சமாய் தொடர்ந்து படர்ந்த சொந்தங்களை கண்டும் காணாதது போல் கடக்கும் இந்த நவீனம், களம் அடித்து உண்டு உறங்கிய பொழுதுகளையும் உறவுகளையும் இனி வரும் காலங்களில் என் பிள்ளையோ யாரோ கேட்காமலா போவார்கள் இந்த கதையை.