இப்படிக்கு இதயம்

காலை எட்டு மணிக்கு தன் வாசலில் வந்து நின்ற காரையும் அதில் வந்தவரைப் பார்த்ததும் மனதில் எழுந்த கோபத்தை மிகுந்த சிரமத்துடன் அடக்கினார் சடகோபன். வயதான போதும் வேகமாக ஹாலில் இருந்து வாசலை நோக்கி நடந்தார். மனக்கலக்கத்துடனும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் அவர் மனைவி பார்வதியம்மாள். என்னதான் வயது ஆனாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பமும் துயரமும் அவர் உடலையும் உள்ளத்தையும் வைரம் பாய்ந்த கட்டையாக மாற்றியிருந்தது. இதை அவர் மனைவி அறிந்திருந்தாலும் மனது கேட்கவில்லை. பாசம் என்ற ஆயுதம் பார்வதியம்மாள் மூளையை ஜெயிக்கவிடவில்லை.

காரில் வந்தது மகேஸ்வரனும் அவர் மனைவி கல்பனாவும்.
“வணக்கம் சடகோபன் சார்” என்றார் மகேஸ்வரன்
“வணக்கம் உள்ள வாங்க” என அவர்களை உள்ளே அழைத்து சென்றார் சடகோபன்.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு எண்ண ஓட்டம் அதனால் சிறிது நேரம் மொளனமே அங்கு ஆட்சி செய்தது. கல்பனா சட்டென சடகோபன் காலில் விழுந்தாள் “நீங்க செஞ்ச உதவிக்கு என்ன கைமாறு பண்றதுனு தெரியல ... எங்க குலத் தெய்வம் நீங்க” என விக்கி விக்கி அழுதாள். பார்வதியம்மாள் மெல்ல அவளை சமாதானப்படுத்தி “அப்படி சொல்லாதம்மா” என தன் அருகில் அமர்த்திக் கொண்டாள்.

“சார் நீங்க தப்பா நினைக்கக் கூடாது ... இதை ஏத்துக்கணும்“ என ஒரு காசோலையை சடகோபனிடம் சற்றே தயக்கத்துடன் நீட்டினார் மகேஸ்வரன். அதில் மகேஸ்வரன் கையெழுத்து மட்டுமே போட்டிருந்தார். தொகை நிரப்பப் படவில்லை. காசோலையை வாங்கிய சடகோபன் அதையே இரெண்டொரு நொடி பார்த்தார் பின்பு சட்டென்று தன் அறைக்குள் சென்றார். பார்வதியம்மாள் கலங்கினார் நடக்க போவதை எண்ணி பயந்தார் அதை தவிர வேறு ஒன்றும் அந்நிலையில் அவரால் செய்ய முடியாது. சடகோபனின் கோபம் அவள் கண்ணுக்கு துள்ளியமாய் தெரிந்தது.

வெளியே வந்த சடகோபன் “உங்களால முடிஞ்சா இதை கொடுங்க“ என காட்டினார். காசோலையில் அவர் மகன் ரவியின் புகைப்படம் ஒட்டியிருந்தது.
“இது ரவி... மாதிரி ...”
“ஆமா என் மகன் ரவி” என கடுமையாக பதில் அளித்தார்.
மகேஸ்வரனால் பேச முடியவில்லை தலை சுற்றியது வேர்வை வழிந்தது.
“என் மகனோட இதயம்தான் இப்ப உங்க ஏழு வயசு மகனை காப்பாத்தியிருக்கு”
“ஐயோ கடவுளே“ என வாய்விட்டு கதறிவிட்டார் மகேஸ்வரன்.

“என்ன மிஸ்டர் மகேஸ்வரன் என் மகனை திருப்பிக் கொடுக்க முடியுமா?” என கேட்ட சடகோபனின் குரலில் கோபம் தாண்டவமாடியது.
“என்னங்க உங்களுக்கு தெரியுமா இவரை?” என கல்பனா ரவியின் புகைப்படத்தைக்காட்டி மகேஸ்வரனிடம் கேட்டாள்.
“தெரியுமாவா என் மகனை பத்து வருஷத்துக்கு முன்னாடியே உன் புருஷன் கொன்னுட்டான்” என ஆத்திறத்துடன் கூறினார் சடகோபன்.

கல்பனாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் விழித்தாள். மகேஸ்வரன் மௌனமாக கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார்.
நானே சொல்றேன் கேளு என கல்பனாவிடம் கூற ஆரம்பித்தார் “பத்து வருஷத்துக்கு முன்னாடி என் பையன் இனஜினியரிங் காலேஜ்ல முதல் வருஷம் சேர்ந்தான். பல கனவுகளோடும் ஆசையோடும். அதே காலேஜ்ல உன் புருஷன் கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தான். உன் புருஷனும் அவன் நண்பர்களும் முதல் வருஷம் படிக்கிற பசங்கள பயங்கரமா ராக்கிங் செஞ்சாங்க. எல்லாம் ராட்டஷ ஜென்மம் மத்தவங்கள கஷ்டப்படுத்தி பார்க்கறதுல என்ன சந்தோஷமோ தெரியல...” என மகேஸ்வரனை வெறுப்போடுப் பார்த்த வண்ணம் தொடர்ந்தார்.

“ஒரு நாள் காலேஜ்ல உன் புருஷன் என் மகனை வலுகட்டாயமா சண்டைக்கு இழுத்தான். ரவிக்கும் கோபம் வந்து அது கைகலப்பு வரைக்கும் போயிடுச்சு. மகேஸ்வரனோட நண்பர்கள் சிவப்பு சாயத்த மகேஸ்வரன் மேல பூசி, ரவி அடிச்சதால மகேஸ்வரன் செத்துட்டான்னு சொல்லிட்டாங்க. உன் புருஷனும் அவன் நண்பர்களும் ஆடிய விபரீத விளையாட்டு வினையா போயிடுச்சு. ரவி தன்னை ஒரு கொலையாளியா நினைக்க ஆரம்பிச்சுட்டான். ரவிக்கு அதிர்ச்சியால கடுமையான ஜீரம் வந்து சுயநினைவை இழந்துட்டான்.”

பார்வதியம்மாள் விசும்பலும் கூட சேர்ந்தது சடகோபன் கண்ணகளில் நீர். மகேஸ்வரன் மனக்கண் முன் ரவியின் உருவம் வதைத்தது.
சடகோபன் மேலும் தொடர்ந்தார் “அந்த ஒரு சில நொடி அவனுக்கு ஏற்பட்ட கொடுமையான அதிர்ச்சியால அவன் வாழ்க்கையை சூன்யம் ஆயிடுச்சு. பயந்த சுபாவமுள்ள ரவிக்கு பைத்தியம் பிடிச்சு தனக்குதானே பேசுவான் சிரிப்பான் அழுவான். நாங்க எவ்வளவு சொல்லியும் அவன் மனசு ஏத்துகல ...“நான் கொலை செய்யல ... நான் கொலை செய்யல“ இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தான். அவனை தனி அறையில பூட்டி வைக்கிறஅளவு நிலைமை கைமீறி போயிடுச்சு. எத்தனையோ சிகிச்சை ம்ம்ம்... எதுக்கும் பலனில்ல. படிப்பு வேலை கல்யாணம் எதுவுமே அவன் வாழ்க்கைல இல்ல ... எங்க ஆசை கனவும் கூட கனவாவே போயிடுச்சு” என மேலும் பேச முடியாமல் ரவியின் போட்டோவப் பார்த்து தேம்பி தேம்பி அழுதார்.

சற்றே சுதாரித்தவர் “இருபது நாள் முன்னாடி அறையில இருந்த ரவி எப்படியோ வெளியில ஒடிப்போயிட்டான் எதிரல வந்த லாரிகாரன் அவன்மேல மோதிட்டான். டாக்டர் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிற்கு இனிமே ஒண்ணும் செய்ய முடியாதுனு சொல்லிட்டார். அதே மருத்துவமனையிலதான் உங்க மகனை இதய மாற்று சிகிச்சைக்காக சோ்த்திருந்தீங்க. டாக்டர் என்கிட்ட ரவியோட இருதயம் உங்க மகனுக்கு பொருத்தமா இருக்குன்னு சொல்லி ... ஆபரேஷனுக்கு என் அனுமதி கேட்ட போது இதுல எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடு இல்ல”

இதை கேட்ட மகேஸ்வரனும் கல்பனாவும் அதிர்ச்சியுடன் சடகோபனை பார்த்தனர். மகேஸ்வரனை நேருக்கு நேராக பார்த்த சடபோபன் “என் மகன் வாழ்க்கைய சீரழிச்ச உனக்கு தண்டனை கொடுக்க நினைச்சேன். ஆனா எந்த பாவமும் செய்யாத உன் மகனை தண்டிக்க நான் விரும்பல அதனால ரவியோட இருதயத்த உன் மகனுக்கு கொடுக்க சம்மதிச்சேன். உன் மகனை பார்க்கற ஒவ்வொரு நொடியும் என் அப்பாவி ரவி உன் கண் முன்னால வருவான். இதைவிட பெரிய தண்டனை வேற ஒண்ணும் உனக்கு இருக்க முடியாது.”

“உனக்கும் உன் மனைவிக்கும் எல்லா விஷயமும் தெரியணும் அதனாலதான் மருத்துவமனையில உன்ன சந்திக்காம தவிர்த்தேன். இனிமே உன் மகனை ராகவ்வா இல்லாம ரவியா பார்க்கப் போற புது அனுபவத்துக்கு தயாரா இரு”

மகேஸ்வரன் செய்த தவறு அவன் முன் விஸ்வரூபம் எடுத்தது.
தான் இப்படி ஒரு இழிவான காரியம் செய்ததை எண்ணி வெட்கத்தில் கூனிகுறகிப் போனான். ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டான். எத்தனை ஆசை, கனவு, லட்சியத்தோடு ரவி கல்லுரியில் காலடி எடுத்து வைத்திருப்பான்.

மகேஸ்வரன் கல்பனாவோடு அங்கிருந்த மொளனமாக குற்றவாளியாக கிளம்பினான். மன்னிப்பு கேட்கும் தகுதியை கூட இழந்தவனாக.

மருத்துவமனையில் ஆழ்ந்த உரக்கத்தில் இருந்த தன் மகன் ராகவ்வை பார்க்கும்போது “கவலைப்படாதே நான் இருக்கேன் உன் மகனை காப்பாற்ற” என ரவியின் இதயம் கூறுவதுப் போல் இருந்தது மகேஸ்வரனுக்கு.

எழுதியவர் : Shreerao (27-Feb-15, 10:11 pm)
Tanglish : ipadikku ithayam
பார்வை : 131

மேலே