நண்பர்களின் வரவு

என் வீட்டின் சாளரங்கள் வழியாக
தினமும்
மூன்று தடவையாவது ..
உள்ளே சுதந்திரமாய் வந்து ..
இப்படியும் அப்படியுமாய்
தலையசைத்து
தாங்கள் மகிழ்வதோடு
என்னையும் அன்புடன் வந்து பார்த்துப் போகும்
இந்த இரண்டு அணில்களும்
எனக்கு என்ன உறவு..?

அவற்றுக்கு மட்டும் ஏன்
எந்த வித்தியாசமும்
தெரிவதில்லை..?
கொறிப்பதற்கு எதுவும்
நான் வைத்தாலும்
வைக்கா விட்டாலும்
என்னைப் பார்க்க வருவது
தவறுவதில்லையே.!.
என்ன சினேக பாவமிது.!.

மறுபிறவி பற்றிய
நம்பிக்கைகள் எனக்கில்லைதான்..!
ஆனால் மறைந்த என்
அன்புத் தாயையும்
அருமை தந்தையையும்
நினைவுபடுத்தி
அவர்களின்
அக்கறையும் பாசமும்
இந்த அணில்கள் வந்து காண்பிக்கும் போது..
என் சித்தாந்தங்கள் கரைகின்றனவே..!..

பிரதிபலன் பார்க்காத
அணில்கள் போலும் இவை !..
நம்மால் தான்
அப்படி இருக்க முடிவதில்லை..!
இருக்க முடியும் போது ..நாமும்
அணில்களாகி விடுவோம் போல..!
ராமர்களை தேடி சென்று உதவி செய்ய..!

வாழ்க்கையின் அர்த்தங்கள்
எங்கெல்லாம்
புதைந்திருக்கின்றன ..
தேடாமல் புலப்படுவதில்லை அவை!

எழுதியவர் : கருணா (28-Feb-15, 2:49 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : nanbarkalin varavu
பார்வை : 57

மேலே