மீடியம் ஸ்ட்ராங்கில் மிச்சமிருந்த மசாலா டீ
...மீடியம் ஸ்ட்ராங்கில் மிச்சமிருந்த மசாலா டீ....
ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை
அறியாத பாதங்கள்
தேங்குநீரில் மூழ்கி
குழி தாண்டி வடிய-அவை
செருப்பில்லா கால்களின்
வலியின் கனவளவு.
சிக்கு விழுந்த கூந்தல்
குமட்டுமவளுடல் வாடை
வெட்டியறியா நகங்கள்
தொப்புள் தெரிய
நகன்றதேயில்லை
கிழிந்த சேலை.
தாடையோரம் ஆறாப்புண்
அழுக்குமறை ஒரு மச்சம்
நாயொன்றின் நகக்கீறல்
கைநீட்டல் பேசிவிட
வார்த்தைகளறியா வெடித்த உதடு
அழகு தொலைத்த அவள் முகம்.
யாரோ ஒரு அரக்கன்
ஊரடங்கிய ஓரிரவில்
காமவெறிப் பசியால்
சதைக்குழல் ஊதி
உப்பிய வயிற்றோடு
தேம்பி நடந்து நிற்கிறாள்.
இன்னமும் மண்சேரா
மிச்சமிருக்கும் மசாலா டீயை
மெள்ளப் பருகிய பின்னும்
ஆயிரம் சவுக்கடியை
பார்வையில் வீசியவாறு
அவனையே வெறிக்கிறாள்.
இன்னா பாத்துகினுகீற
வாங்கிக் குடிச்சியா
போய்னே இரு
சுடுகின்ற அவன் வழக்கு
ஒவ்வொன்றும் அவளுக்கு
வெந்தமிழாய்.
இருளான இடமனினும்
மங்கிய விழிகளிரெண்டும்
படம்பிடித்து வைத்திருக்கிறது
வேண்டாமென்ற சினத்தில்
அவள் பற்கள் கடித்த
அடையாளம் அவன் கைகளில்.
--கனா காண்பவன்