விகடனில் வந்த என் கட்டுரை

தரமற்ற சாலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

வாசகர் பக்க கட்டுரை

"ஜப்பானில் மழை வந்தா 5 நிமிசத்தில் மழை தண்ணி காணாம போய்டும். ஆனால் இந்தியாவில் மழை வந்த 5 நிமிசத்தில் ரோடே காணாம போயிடும்" - வாட்ஸ் அப்பில் வந்த இந்த ஜோக் மாதிரிதான் நம்நாட்டில் சாலைகளின் நிலை உள்ளது.

தரமற்ற சாலைகள் எல்லாமே கூடிய விரைவில் பழுதாகி குண்டும் குழியும் ஆகி விடுகின்றன. இதற்கு காரணம் ஒப்பந்த‌தாரர் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதும், புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தாதது, தரமற்ற சாலை வடிவமைப்பு, மலிந்துவிட்ட ஊழல்கள், அதிகாரிகளின் அலட்சிய போக்கு, அரசியல் தலையீடுகள் என்று புலம்புவது மக்களின் அன்றாட வாடிக்கையாகிவிட்டது.

இதே போன்று கிரஷர் மணலை பயன்படுத்தி போடப்பட்ட சாலையான விவிடி சாலை ஒரு மழைக்கு கூட தாங்கவில்லை. சாலை வடிவமைப்பு மிக முக்கியமான ஒன்று. சாலைகளின் இருபுறமும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய்கள் கட்டப்பட்டு, மேல் புறம் கான்கிரீட் கலவையினால் மூடப்பட்டு, அதை பாதசாரிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

புதிய சாலை கட்டி முடித்தாலும் சோதனை செய்யும் அரசு அதிகாரி சொல்லும் இடத்தில் துளையிட்டு எத்தனை இன்ச் என்பதை காண்பிக்க வேண்டும். சாலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு இல்லாமல் சீக்கிரம் பழுதாகிவிட்டால் சரி செய்து கொடுக்க வேண்டும். இதில் அதிகாரி முறையாக சோதனை செய்யாமல் அனுமதி வழங்கி இருந்தால் அவரும் சிறை செல்ல வேண்டும். மீறும் பட்சத்தில் அபராதமும் சிறையும் மற்றும் புதிய தொழில் சான்றிதழ்களும் ரத்து செய்ய வேண்டும்.

புதிதாக போடப்படும் சாலைக்கான பணம் முழுவதையும் உடனே கொடுத்து விடாமல் ஒப்பந்தம் முடியும்வரை 30% பணம் பாக்கி நிலுவையில் வைத்திருக்க வேண்டும். தரம் வாய்ந்த சாலைகளை போட பணம் பல லட்சம் தேவைப்படும். ஆனால் பல வருடங்கள் அருமையாக இருக்குமே என்று போடப்படும் சாலைகள் மூன்று மாதங்கள் கூட தாக்கு பிடிப்பதில்லை. மீண்டும் மீண்டும் சாலைகளை போடுவதால் மக்கள் பணம்தான் விரயம்.

தரமற்ற முறையில் சாலைகள் போடுவதினால் யாருக்கு லாபம்? இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.

ஷான் ( மயிலாடுதுறை)

எழுதியவர் : (3-Mar-15, 3:49 pm)
பார்வை : 264

மேலே