அம்மா - முரளி
அம்மா!
அம்மாவுக்கு இன்னொரு பெயர் 'உழைப்பு'. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது பெண்ணின் கல்யாணம். இன்னும் கல்யாண வேலைகளை முழுமையாக கான்ட்ராக்டில் விட ஆரம்பிக்காத காலம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன். எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கொஞ்ச நாட்களாக தம்பி குடும்பத்துடன் கோழிக்கோட்டில் இருக்கிறாள். கல்யாணத்திற்க்காக ஒரு வாரம் முன் வந்திருந்தாள்.
நான் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க பொறுமையாக கோலத்தை முடித்து விட்டு எழுந்து நின்று எப்படி வந்திருக்கிறது என்று தானே பார்த்து ரசித்துவிட்டு திரும்பிய பொதுதான் கவனித்தேன் அம்மா முகம் மிகவும் வாடி இருந்தது. அம்மா முகம் எப்போதும் பளிச்சென்று ஒரு பெரிய பொட்டு, ஒரு சிறிய மென்னகையுடன் வசீகரமாக இருக்கும். அருகில் வந்தவுடன் கேட்டேன். "ஒண்ணுமில்லடா இரண்டு நாளா சுரம், மாத்திரை சாப்பிட்டேன் கொஞ்சம் பரவாயில்லை," சரி என்று கல்யாண வேலையில் மூழ்கி விட்டேன். ஒரு வாரம் கழித்து அப்படி ஒரு செய்தி வரும் என்று எதிர் பார்க்க வில்லை.
கல்யாணம் முடிந்தவுடன் அம்மா ஊருக்கு புறப்பட்டுச் சென்று விட்டாள். சரியாக ஒரு வாரம் இருக்கும். தம்பியிடம் இருந்து அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. "அம்மாவுக்கு இரத்தத்தில் புற்று நோய்" . மனம் பாரமாய் அழுத்த சிறிது மவுனத்திற்குப் பிறகு "உடனே சென்னைக்கு அழைத்து வா இங்கே நல்ல மருத்துவ வசதி உண்டு, பார்க்கலாம்" என்றேன். அடுத்த நாள் காலை அம்மா இருக்கும் கம்பார்ட்மென்ட் முன் சக்கர நாற்காலியுடன் நிற்க அம்மா நெளிந்தாள். "இதெல்லாம் எதற்கு....? நான் நடப்பேன்" என்றாள். பரவாயில்லை என்று சொல்லி உட்கார வைத்து வாடகைக் கார் வரை வந்தோம். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் அதே காரில் 'அடையார் கான்சர் மருத்துவ மனைக்குச்' சென்றோம். அம்மாவுக்கு கான்சர் என்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்ல வில்லை. கான்சர் ஆஸ்பிடலுக்குச் செல்கிறோம் என்பதை முடிந்தவரை அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.
பல பரிசோதனக்குப் பிறகு மருத்துவர் என்னையும் தம்பியையும் அழைத்து "அம்மாவுக்கு வந்துள்ளது ஒருவகை இரத்தப் புற்று நோய், விரைவாகத் தீவிரமாகக் கூடியது. அம்மாவுக்கு சிகிச்சை தொடங்கினால் நோயை விட அதிகமாகத் துன்பம் அடைவாள், இருக்கும் வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவும்" என்றார். நான் துணுக்குற்று "இருக்கும் வரை என்றால் என்ன அர்த்தம்?" என்றேன். அவர் பொறுமையாக "நீங்கள் வீடு திரும்பும் முன்னோ, ஒரு வாரத்திலோ, மூன்று வாரத்திலோ இல்லை மூன்று மாதத்துக்குள்ளோ, அம்மா இறந்து விடுவார்" என்றார். சொன்னவர் சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, இரண்டு வாரங்கள் கொடுங்கள், பிறகு வந்து பாருங்கள் என்றார்.
நாங்கள் இருவரும் செய்வதறியாது திகைத்தோம். கனத்த மனத்துடன் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தோம். எல்லோரிடமும் அம்மாவுக்கு வயிற்றில் கட்டி, சுரம் அதிகமாக இருப்பதால் இப்பொழுது மருந்து கொடுத்து இருக்கிறார்கள் இரண்டு வாரம் கழித்து வரச்சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி வைத்தோம். அம்மாவுக்கு தீவிர சுரத்துடன் வயிற்று வலியும் இருந்தது. மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் கொடுத்து மனதின் இறுக்கத்தை வெளிப் படுத்தாமல் நடமாடிக் கொண்டிருந்தோம்.
அம்மா அவளுடைய தங்கை மகள் கல்யாண வீடியோ பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள். அவர்கள் வீட்டுக்குச் சென்று உடனே வாங்கி வந்தேன். ஒரு VCD player வாடகைக்கு வாங்கி வந்து எல்லோரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அம்மா உட்கார்ந்த படியே தூங்கி விட்டாள். மெள்ள அம்மாவை உள்ளே கட்டிலில் படுக்க வைத்தோம்.
இரண்டு நாளில் அம்மாவுக்கு சிறிது முன்னேற்றம் அடைந்தது போல் இருந்தது. மனதுக்குள் லேசாக நம்பிக்கை துளிர்விட மருந்து வேலை செய்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் மீண்டும் வயிற்று வலி அதிகமாகி, சுரமும் அதிகமாக மிகவும் துன்பப் பட்டாள். அம்மா படும் துன்பத்தைத் தாள முடியாமல் அருகிலிருக்கும் தனியார் மருத்துவ மனைகளில் அம்மாவின் நிலைமை கூறி அவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து கவனித்துக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். என்ன காரணமோ தெரியவில்லை மறுத்து விட்டனர்.. மனம் வெறுத்து என்ன செய்வது என்று தெரியாமலும் அம்மா படும் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காமலும் அந்த இரவு கடந்தது.
அடுத்த நாள் அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் போய்விட்டு சீக்கிரம் வருவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றேன். மேலாளர் சிறிது நேரத்திலேயே என் சிந்தனை ஏங்கோ இருப்பதை அறிந்து விசாரித்தார். விஷயத்தைக் கூறி அருகிலுள்ள மருத்துவ மனைகள் அனுமதி மறுத்ததையும் கூறினேன். "அடப் பாவி இதுக்கா இப்படி இடிந்து போய் உட்கார்ந்து விட்டாய், இரு..." என்று கூறிவிட்டு யாருடனோ தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு, தொலை பேசியை என்னிடம் தந்தார். எதிர் முனையில் சென்னையின் மிகப் பிரபல புற்ற நோய் சிகிச்சை மருத்துவர். சென்னை சோலிங்கநல்லூரில் புதிதாகத் துவக்கப் பட்டுள்ள ஒரு பெரிய மருத்துவ மனையின் தலைமை மருத்துவர். அம்மாவின் நோய் விவரம் கேட்டறிந்து " நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள், இங்கே அழைத்து வாருங்கள், நாங்கள் பார்த்துக் கோள்கிறோம். ஆம்புலன்ஸ் வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்" என்றார். மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது. நன்றி கூறி தொலை பேசியை கீழே வைக்க வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. அம்மா மிகவும் கஷ்டப் படுகிறாள் என்று. உடனே வருகிறேன், அம்மாவை மருத்துவ மனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்து விட்டேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். எங்கள் அலுவலக வாகனம் என் வீட்டுக்கு அருகாமையில் சென்றுள்ளதால் அவர்களை என் வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறினர். நான் என் LML வெஸ்பாவில் பதினைந்து நிமிடத்தில் தலை தெறிக்க வீடு வந்து சேர்ந்தேன். நான் அப்பா அம்மா மூவரும் தயார் நிலையில் இருக்க அரை மணி நேரம் ஆகியும் அலுவலக வண்டி வரவில்லை. எந்தத் தகவலும் இல்லை. கைப்பேசி இல்லாத காலம். அலுவலகத்தில் இருந்து அடிக்கடி வீட்டுத் தொலை பேசியில் அழைத்து வண்டி வந்ததா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அம்மா படும் அவதியைக் காணப் பொறுக்காமல் ஒரு ஆட்டோவை அழைத்து கிளம்பி விட்டோம். வீட்டிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்த மருத்துவ மனைக்கு ஆட்டோவில்?! பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வழி நெடுக அம்மா வலியால் துடித்துக் கொண்டே இருந்தாள். அந்த நெடும் பயணம் வாழ்வில் என்றும் மறக்க முடியாதது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அம்மா "எங்கடா கூட்டிண்டு போற" என்றாள். "இன்னும் கொஞ்சம் தூரம் தாம்மா.." என்று சொல்லிச் சொல்லியே கடைசியில் வந்தடைந்தோம். எங்களுக்கு முன்னே அலுவலக வாகனமும் நண்பரும் மருத்துவமனை வாயிலில் நின்றிருந்தனர். என்னைப் பார்த்து "sorry, we had a flat tire" என்றனர். பதில் கூறும் நிலையில் நான் இல்லை. ஆறுதலான விஷயம், முதன்மை மருத்துவர் எங்களுக்காக காத்திருந்தார். உடனே சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அம்மாவுக்கு கொஞ்சமாவது வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினோம்.
இரவு ஒன்பது மணிக்கு ICU-வில் எட்டிப் பார்த்த போது அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா என்னை வீட்டுக்குப் போய் காலை வா என்றார். நானும் சரி என்று வந்து விட்டு அதிகாலை ஐந்து மணிக்குக் கிளம்பினேன். ஒரு பஸ் பிடித்து அடையார் வந்து சுமார் ஆறரை மணிக்கு அடையாரில் மருத்துவமனைக்குச் செல்லும் மற்றொரு பேருந்ததில் ஏறி அமர்ந்த போது என் உடம்பு நானறியாமல் குலுங்கியது. கண்ணிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது. நான் எதற்கும் கலங்காதவன், சிறு பிள்ளையாய் அம்மாவிடம் அடி வாங்கிய போதன்றி வேறு எப்பொழுதும் கண்ணீர் சிந்தியது இல்லை. இது சற்று விநோதமாக இருந்தது.
சிறிது நேரத்தில் மருத்துவ மனை சென்றடைந்தேன். நான் வருவதைப் பார்த்து ஓடி வந்த அப்பா பதற்றத்துடன் "she is sinking, she is sinking..." என்றார். அப்பாவைப் பிடித்துக் கொண்டே உள்ளே அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். அம்மா அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் எப்பொழுதும் இருக்கும் அந்தப் புன்னகை மீண்டும் பூத்திருந்தது. வலியால் அவதிப் படுவது போல் ஒன்றும் தெரிய வில்லை. அப்பொழுது அங்கே வந்த ஒர் இளம் மருத்துவர் என்னை யார் என்று வினவி தனியே அழைத்துச் சென்றார். என் கைப் பற்றி மெல்ல "மன்னிக்கவும் எங்களால் உங்கள் தாயாரைக் காப்பாற்ற முடியவில்லை..... அப்பாவிடம் சொல்லி அவரைக் கலவரப் படுத்த விரும்பவில்லை... ஆதலால் உங்கள் வருகைக்காக. காத்திருந்தோம்... Her spleen has burst... இரத்தக் கசிவு இருக்கும்... சுத்தம் செய்து pack செய்து கொடுப்பார்கள்.... அமரர் ஊர்திக்கு ஏற்பாடு செய்கிறோம்... காத்திருக்கவும்" என்றார்.
அப்பாவை அழைத்துக் கொண்டு வரவேற்பு அறை வந்து அமர்ந்து மெல்ல விஷயத்தைச் சொன்னேன்...
"எனக்குத் தெரியும்.... என்னை விட்டுட்டு போய்ட்டா பார்...." என்று குலுங்கிக் குலுங்கி என் தோள் மேல் சாய்ந்து அழுதார். அப்பா அழுவதையும் அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன்....
சில விஷயங்கள் புரிபடுவதில்லை:
* இறுதிக் காலத்தில் போராடும் உயிருக்கு உதவாத சில மருத்துவ மனைகள்.(Paliative treatment)
* நெடும் பயணம் வந்த ஆட்டோ ஓட்டுனர் எந்தவித முனகலும் இல்லாமல் குறைந்த கட்டணம் பெற்று சவாரி இல்லாமல் திரும்பிச் சென்றது (மனிதம்)
* நோயாளி வரும் வரைக் காத்திருந்த தலைமை மருத்துவரின் கரிசனம்.
* அடையார் பேருந்தில் நான் விட்ட கண்ணீர்
* அப்பாவை அலைக் கழிக்காமல் நான் வரும் வரைக் காத்திருந்த மருத்துவரின் பெருந்தன்மை.
* அந்த ஒரு நாள் சிகிச்சைக்கு என்னிடம் அதிகமாக காசு பிடுங்காமலும் கண்ணியமாகவும் நடந்து கொண்ட மருத்துவ மனை.
* நாங்கள் வீடு வந்து சேர்வதற்குள் உறவினர் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்ட என் மனைவியின் அமைதியான செயல்பாடு.
அம்மாவின் நினைவு வரும் பொழுதெல்லாம் கூடவே இந்த நினைவு அலைகள் சுற்றியடிக்கும்