ஹரிணியின் உலகத்தில்

"தொந்தரவு செய்யாதே..!"
அறிவித்த மகள்
வண்ணங்களைக் குழைத்து
வரைந்தாள் ஒரு ஓவியம்..!

வெற்றுத்தாள் வீடாகியிருந்தது.
நன்றாயிருக்கிறது என்றேன்.

"போங்கப்பா..உங்களுக்கு
ஒண்ணுமே தெரியலை.
மரமே இல்லாம வீடிருந்தா
நல்லாருக்காதுன்னு தெரியாதா..?"

கேள்வியின் விஸ்வரூபம்
மனைதைக் குடைய
ஆமோதித்தேன்.

அவளின் தூரிகை
இப்போது
ஒரு மரத்தை வரைந்தது.

உடனடியாய் பூக்கத் துவங்கிவிட்ட
அந்த அதிசய மரத்தில்
பறவைகள் கூடுகட்டத் துடித்தன.

வெட்டவெளியில் இருந்த நிலத்தில்
கட்டமுடியா வீட்டை எண்ணி
கவலை கொண்டிருந்த
நாங்களும் இப்போது
அதில் குடியேறினோம்..!
-----

இது தோழர் குமரேசன் கிருஷ்ணனின் மகள் ஹரிணி கிருத்திகாவின் ஓவியம் ,
"வீடு என்று ஒன்று இருந்தால்.அதில் மரமும் இருக்கவேண்டும்.." என்று மனதில் பதித்துக் கொண்ட உயர்ந்த எண்ணத்திற்கு எனது வணக்கமும் வாழ்த்தும்..! -

அன்புடன்
பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (4-Mar-15, 12:46 pm)
பார்வை : 184

மேலே