அயல் நாடு செல்லும் பிள்ளையின் கவலை
வட்டியில் சோறு போட்டு
வட்டமாய் அமர்ந்து கொண்டு
வான் நிலவை பார்த்து
பூமி உருண்டை போல
சோறு பிடித்து கொடுத்து
சாப்பிட்ட சந்தோசம்
வட்டிக்கு பணம் வாங்கி
வங்கியில் நகை அடகு வைத்து
வானூர்தியில் பறக்கும் போது
வான் நிலவை பார்க்கும் போது
கிடைக்கவில்லை சந்தோசம்
அயல் நாடு சென்று
அந்நிய மண்ணில்
அயராது உழைத்து
அரும் பாடு பட்டு
குருவியாய் பணம் சேர்த்து
குருவியிடம் பணம் கொடுத்து
போய் சேருமா சேராத
தாய் முகம் மலர
என்று நினைக்கும்போது
கிடைக்கவில்லை சந்தோசம்