கனவே கலைந்து போ ---------- பாகம்-2 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
பிரசாத் ஒரு பத்திரிக்கையாளன். அவனை நந்தினி என்கிற சின்னத்திரை நடிகை தன் வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு அழைத்திருந்தாள்.....
................................................................................................................................................................................................
பிரசாத் நந்தினியின் ப்ரீயம் அபார்ட்மெண்ட்டை தேடி ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தபோது காலை மணி பத்தை தொட்டிருந்தது. ப்ளாட் அருமையாகத்தான் இருந்தது. நந்தினியின் பிளாட் தரைத்தளம் பிளஸ் ஒன். அதாவது தரைத் தளத்தில் சமையலறை, சாப்பாட்டு அறை, கூடம், ஒரு அறை. வீட்டுக்குள்ளேயே படியேறிப் போனால் வலப்பக்கம் டாய்லெட் மற்றும் வசதியான குளியலறை; பாத்டப் போட்டு படுத்துக் கிடக்கலாம். பக்கத்தில் இன்னொரு அறை; ஆடை அலங்காரம் செய்து கொள்ளலாம். இது தவிர மேல் தளத்தில் ஹால், படுக்கையறை, பால்கனி... ! நந்தினி அதிஷ்டசாலிதான்.... !
இப்படி மூன்று வீடுகள் இரண்டு தளங்களில் அமைந்திருந்தன. இரண்டு வீடுகள் முழுக்க முழுக்க மேல் தளத்திலேயே அமைந்திருந்தன. அவற்றுள் ஒன்று கட்டி முடிக்கப்படாமல் அரை குறையாய் இருந்தது.
மேல் தளத்து அறைகளுக்கு நேர் கீழே பார்க்கிங் ஏரியா.
பக்கத்தில் நிர்வகிக்கப்படுகிற ஜெபமணி அனாதை இல்லம்தான் லாண்ட் மார்க். பட்டினப்பாக்கம்தான் பக்கத்திலிருக்கிற பஸ் ஸ்டாண்ட். ஏரியா மிகவும் உள் தள்ளி கடற்கரைக்கு அண்மையில் இருந்தது. சுனாமிக்கு முன் மீனவர் குப்பம் இருந்திருக்கலாம். இப்போது ஒன்றுமில்லை. ஏரியாதான் சரியில்லை. கசாப்பு கழிவுகளை கொட்டுகிற நாற்றம் பிடித்த திடல், மனிதக் கழிவுகள் நிரம்பிய ரயில் வராத ரயில்வே ட்ராக்... அந்த சப்-வே பகுதியில் கொலை நடந்தாலும் தெரியாது போலும். இந்த லட்சணத்தில் சற்றுத் தள்ளி அடர்ந்த எருக்கம் புதருக்குள் கண்ணில் பட்ட சிகரெட் துண்டுகள், ஆணுறைகள்..அது எந்த மாதிரி இடம் என்பதை சொல்லாமல் சொல்லியது.
நந்தினி பிரசாத்தை பார்த்ததும் ஓடி வந்தாள். உபச்சாரங்கள் முடிந்து தான் கொண்டு வந்த பரிசை அவளிடம் கொடுத்தான். நண்பர்கள்தான் வந்திருந்தனர். வந்தவர்களும் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். வசதியானவர்கள், மென்பொருள் எஞ்சினியர்கள், போட்டோகிராபர்கள், தொழிலதிபர் முருகேசனின் மானேஜர், துணை நடிகைகள், டிரைவர்கள், வாட்ச்மேன், ப்யூன் என்று பல தரப்பட்ட கதம்பமாக நண்பர்கள் வட்டாரம்.
நந்தினி காந்திநகர் ரெஹெனா தொழில் நுட்பப் பூங்காவில் ரிசப்சனிஸ்டாகவும் இரவுப் பணி செய்கிறாளாம். சரியாக தூங்கக் கூட நேரமில்லாத அவள் உழைப்பு பிரசாத்தை பிரமிக்க வைத்தது. எல்லோரிடமும் அவள் நன்றாகப் பேசினாள். எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அவள் மேல் அக்கறை காட்டினார்கள்.
நந்தினி வீட்டுக்குச் செல்ல இன்னொரு வழி பிரசாத்துக்கு அப்புறம்தான் தெரிந்தது. வி. கெ. புரம் நான்காவது குறுக்குத் தெரு; சுற்று வழி. பத்து நிமிடம் நடந்தால் ஓரளவு செல்வாக்கான மனிதர்கள் புழங்கும் ஏரியா வந்து விடும்........!
பிரசாத்துக்கும் வேலை இருந்தது. இருப்பினும் நந்தினிக்காகவே எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்தான். வருவோர் போவோரை காலையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நந்தினி சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று பிரசாத் கணித்திருந்தான். ஒரு மனிதப் பிறவிக்கு எந்தப் பஞ்சமும் வரலாம். நல்ல மனிதர்கள் பக்கத்தில் இல்லாத பஞ்சம் வரக் கூடாது!
ஒழிந்த வேளையில் அவளை உட்கார வைத்து பாந்தமாகப் பரிமாறிக் கொண்டே மெதுவாகக் கேட்டான்,
“சொந்தக்காரங்க யாரும் இல்லையா? ”
நந்தினி மெதுவாகப் புன்னகைத்தாள். “அக்காவும் மாமாவும் நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் புறப்பட்டுப் போனாங்க... ”
பிரசாத்தின் மௌனமும் ஆர்வம் ததும்பிய கண்களும் மேலே சொல் என்றன.
“சொந்த ஊர் கரூர் பக்கம்.. அப்பா தேங்காய் மண்டி வச்சிருந்தார். எனக்கு ஒரு அக்கா. இப்ப கோயமுத்தூரில இருக்கா. மாமாவுக்கு பாங்க்கில வேலை. ஒரு தங்கச்சி இருந்தாளாம்.. எட்டு வயசுல ராமேஸ்வரம் கடல்ல மூழ்கி செத்துட்டாளாம். நான் ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சேன். என்னோட பதினேழு வயசுல அப்பா தவறிட்டார். அதுக்கப்புறம் அப்பா இடத்தையும் அம்மாதான் நிரப்புனாங்க.........ப்ச்....எத்தனையோ கஷ்டப்பட்ட போதெல்லாம் அம்மா இருந்தாங்க. இன்னைக்கு ஒரு நல்லது நடக்கற நேரம் அம்மா இல்ல. ”
“ஓ ஸாரிங்க... ” என்றான் பிரசாத்.
நந்தினி அழவில்லை. ஆனாலும் கனத்த சோகம் புலப்பட்டது.
“அம்மா இறந்து ரெண்டு வருஷமாகுது. அம்மா இருந்த வரைக்கும் கஷ்டமெல்லாம் கஷ்டமா தெரியல; அம்மா போனதுக்கப்பறம் சந்தோஷமும் சந்தோஷமா இல்ல. நான் ஒரு பக்கம் தனியாளா நிக்கிற மாதிரியும் இந்த உலகமெல்லாம் ஒண்ணாத் திரண்டு எதிர்ப் பக்கம் நின்னு சண்டைக்கு வர்ற மாதிரியுமே தோணுது. நல்ல நண்பர்கள் இருக்காங்களோ, பிழைச்சேனோ.. ”
“கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க...ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம்... ”
“எதுவும் செட்டாகல. பையன் நல்லவனா இருந்தா என்னை மாதிரியே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வர்றவனா இருக்கான். பாங்க் பாலன்ஸ் குடும்பத்தை தாங்க ஏத்த மாதிரி இல்ல; நல்லா செட்டில் ஆயிட்டவன் கேக்கிற வரதட்சணையைக் கொடுக்க எனக்குக் கட்டுப்படியாகல. நல்ல குடும்பத்துப் பசங்கன்னு சொல்லிக்கிற கேடகிரி பண்ணுற அலப்பறை படு மோசம்.! எதையெதை காசாக்குறதுன்னு விவஸ்தை இல்லையா? இவங்க பையன் பீடி சிகரெட் குடிக்க மாட்டானாம்; தண்ணியடிக்க மாட்டானாம்... நல்ல விஷயம்.. அதுக்கு என்னைப் போய் எக்ஸ்ரா ஒரு லட்சம் தரச் சொன்னா? உடம்பை வித்... சரி, கேட்கக் கூடாத கேள்வி நாக்கு வரை வந்துடுச்சி... போடான்னுட்டேன்! சாண் ஏறினா முழம் சறுக்குது... இதுல ஏற்கெனவே கல்யாணமானவன், கல்யாணத்தை சாக்கா வச்சி கவுக்க பார்க்கிறவன்னு பல பேரு.. அதனால கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறது இல்ல. கல்யாணம் அப்படி ஒண்ணும் தேவையும் இல்ல..என் ஃபிரண்டு எவனாவது என் கண் முன்னாடி பாதியளவாவது முன்னுக்கு வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கட்டும். மத்தபடி மார்க்கெட்டுல மாப்பிள்ளையை வாங்கற மாதிரி நானில்ல..அவ்வளவு காசு கொட்டிக் கொடுத்து சரிப்படலன்னா என்ன செய்றது? ஒரு வாரண்டி இல்ல, காரண்டி இல்ல; பிடிக்கலன்னா அட்டை பாக்ஸ்ல பாக் பண்ணி பரண்ல கூட வைக்க முடியாது...! ”
பிரசாத் நெளிந்தான். பிறகு சிரித்தான். அவளே தொடர்ந்தாள்.
“அம்மா இருந்தபோது ஆம்பள துணைன்னு யாராவது பேச்செடுத்தா, ஆம்பள துணை எதுக்கு? ஆண்டவன் துணை இருக்குன்னு பட்டுன்னு பேசி வாயை அடைப்பாங்க. ஆம்பளை மட்டும் இமயமலையை சுண்டு விரல்ல தூக்கிட முடியுமாம்பாங்க. அம்மா கிட்ட நளினத்தை விட ஆக்ரோஷம் அதிகம்.. பாரம் தூக்கற வேலையாகட்டும், வெளியே போய் சுத்தற வேலையாகட்டும்..நல்லா செய்வாங்க. அம்மாவைப் பார்க்கறவங்க அடுத்த வார்த்தை பேச மாட்டாங்க..அவ்வளவு சமர்த்து..! மொட்டை மாடில சுவர்ல சாஞ்சி நின்னுட்டிருந்தாங்க, சுவர் இடிஞ்சி விழுந்துடுச்சி. இவங்களும் கீழே விழுந்து மேலே போயிட்டாங்க...”
சோகத்தை விவரிக்கும் போது கூட நந்தினி தன்னிரக்கத்தைத் தவிர்க்கிறாள்....
“கவலைப்படாதீங்க. இனிமே நல்லதே நடக்கும். சரி, சிறப்புக் குலுக்கல்னீங்களே அது என்ன? ”
சிறப்புக் குலுக்கலில் தானே நந்தினிக்கு இந்த வீடு கிடைத்தது? அதைத் தான் பிரசாத் அறிய விரும்பினான்.
நந்தினி பிரசாத்தை ஊன்றிப் பார்த்தாள். பிறகு கேட்டாள், “உங்களுக்கு ஆவி, பேய், பிசாசு நம்பிக்கையெல்லாம் உண்டா? ”
“இது வரை இல்ல; அதுக்கும் என் கேள்விக்கும் என்ன சம்பந்தம்? ”
“ஏன்னா, இந்த அபார்ட்மெண்ட் இருக்கற இடம் இதுக்கு முன்னாடி சுடுகாடா இருந்தது... ! ”
“என்னது? ”
பிரசாத் திடுக்கிட்டான்..............!
தொடரும்