முதல் சம்பளம்
ஆதவன் காலையிலிருந்து தன் கிரணங்களால் பூமியை சுட்டெரித்து வேலை முடிந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு கிளம்ப யத்தனிக்கும் அந்தி வேளை. சத்திரபாளையம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீராவும் தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சுமார் பத்து வயது நிரம்பிய சிறுவன் வீரா. சாலைவழியாக போனால் வீட்டுக்கு போக ஒரு மணிநேரம் ஆகும் அதுவே காட்டுப்பகுதியில் அரைமணி நேரத்திற்க்குள் வீட்டை அடைந்துவிடலாம். எனவே தினமும் காட்டுப்பகுதி வழியாகதான் போவான்.
பண்ணையாரின் தம்பி வைதும்பன் வீட்டில்தான் அவனுக்கு வேலை. வீட்டில் ஒட்டடை அடிப்பது அறைகளை சுத்தம் செய்வது மற்றும் பல எடுபடி வேலைகள் செய்து வந்தான். வீராவும் அவன் தம்பியும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவன் தந்தைதான் வைதும்பன் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தார். வீட்டில் அவன் தாய் இருப்பார்.
ஒரே நாளில் சிறுவனாக இருந்த அவன் வீட்டின் தலைவனாகி விட்டான். குடும்ப தலைவன் என்ற முள் கிரீடம் அவன் தலையில் சூட்டப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன் அவன் தந்தையின் அகால மரணத்தின் காரணமாக ஏற்பட்ட மாற்றம். கடமையின் பொருட்டு கல்வியை துறந்தான். இளம் விதவை தாயையும் தம்பியையும் காப்பாற்றும் பொருப்பு அவனிடம் வந்தது. வீரா சிறுவனாக உள்ளதால் அவன் தந்தை செய்த வேலைகளை முழுவதும் செய்ய முடியவில்லை. இருந்த போதிலும் வைதும்பன் அவன் குடும்ப நலன் கருதி அவனால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யுமாறு கூறினார் அதற்கு சம்பளம் தந்தார். அவன் படிப்பை தொடர வேண்டும் என வலியுறுத்திக் கொண்டே இருப்பார். வீராவும் வீட்டில் இருந்தபடியே படித்தான்.
அன்று ஒரு மாதம் முடிந்து அவன் சம்பளம் வாங்கினான் முதல் சம்பளம். அத்துடன் வைதும்பன் பரிசாக அவனுக்கு புது நோட்டு புத்தகம் பேனா, பென்சில், ரப்பர் மற்றும் இதையெல்லாம் போட ஒரு பென்சில் டப்பாவையும் கொடுத்திருந்தார். வீராவுக்கு இரட்டை மகிழ்ச்சி. வீட்டை நோக்கி அந்த காட்டுப் பகுதியில் நடந்து வருகையில் அவன் கையில் இருந்த டப்பா தவறி கீழே விழுந்தது. அதை குனிந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி. அதில் இரத்தக் கறை ஒட்டியிருந்தது. கீழே ஏதாவது மிருகத்திற்கு அடிப்பட்டு ரத்தம் சிந்தி இருக்கும் காட்டுப் பகுதியாயிற்றே என தன்னை சமாதானம் செய்துக் கொண்டே நடக்க முற்ப்பட்டான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திர சப்தம் கேட்டது. அவன் மனமோ முதலில் இங்கிருந்து ஓடு என்றது. அவன் மூளையோ என்னவென்று பார் என்றது. ஒரு சிறிய போராட்டம் அவனுள். இறுதியில் மூளை வென்றது. இரத்த கறையையும் சத்தத்தையும் வைத்து இடது திசை நோக்கி நடந்தான் தைரியமான வீரா. அங்கே வாலிபன் ஒருவன் மரத்தடியில் சோர்ந்து அமர்ந்து வலியால் முணகிக் கொண்டிருந்தான். அவன் வலதுக் கணுக் காலில் காயம் அதிலிருந்து இரத்தம் வழிந்தது.
“ஐயோ ரத்தம்” தன்னையும் அறியாமல் கத்திவிட்டான் வீரா
சட்டென சத்தம் வந்த்தால் அந்த வாலிபன் தன் ஒரு கையை சட்டையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியிலும் மற்றொரு கை அருகிலுள்ள மூட்டையிலும் பதிந்தது. வாலிபன் திரும்பிப் பார்த்தான் சிறுவனாகையால் கத்தியின் பிடி தளர்ந்தது. ஆனால் மூட்டையிலுள்ள பிடி தளரவில்லை. சண்டை போடும் நிலையில் வாலிபன் இல்லை.
இதையெல்லாம் கவனிக்காத வீரா “வைத்தியர் கிட்ட போலாம் வாங்க …… நான் கூடிட்டு போறேன்”
வாலிபனோ “தண்ணி ……… தண்ணி” பேச முடியாமல் திக்கி திணறினான்.
“இருங்க கொண்டு வரேன்” என அருகில் உள்ள ஓடைக்குச் சென்றான். இரண்டு கைகளையும் சேர்த்து கிண்ணம்போலாக்கி அதில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தான். பிஞ்சு கையில் எத்தனை தண்ணீர் பிடிக்கும் அதுவும் ஓடி வரும்போது சிந்தவும் செய்தது. ஆதலால் வீரா நான்கைந்து முறை செல்ல வேண்டியதாயிற்று.
“இப்ப பரவாயில்லயா அண்ணா?” என பெரிய மனிதன் போல் விசாரித்தான் வீரா
“ம்ம்…… பரவாயில்ல”
“வாங்க வைத்தியர்கிட்ட போலாம்”
“வேண்டாம் ……….. சரியாயிடும்”
“அதெப்படி தானே சரியாகுமா ……….. வைத்தியம் பாக்கணும்………….எப்படி காயம் ஆச்சு?”
“இன்னிக்கு நான் வேலைக்கு போயி முதல் சம்பளம் வாங்கியிருக்கேன் ……… முதல் வேலையில்லயா அதான் கொஞ்சம் தப்பாயிடிச்சு ” என மர்மச் சிரிப்புடன் தன் அருகிலுள்ள மூட்டையை வெறித்துப் பார்த்தான்.
வீராவுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் முதல் சம்பளம் என்ற வார்த்தை மட்டும் அவன் மனதில் பதிந்தது. உற்சாகமாக அவனும் “அட நானும் இன்னிக்கு முதல் சம்பளம் வாங்கி இருக்கேன்” என்றான்
“ என்ன நீயுமா?” என்றான் குழப்பமாக
கள்ளம்கபடம் அறியாத வீரா “ஆமாம் அண்ணா ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்க அப்பா…………” என அத்தனையையும் ஒன்றுவிடாமல் கூறினான்.
இதைக் கேட்ட வாலிபனுக்கு தன்னுடைய முதல் சம்பளத்திற்க்கும் அவனுடைய முதல் சம்பளத்திற்க்கும் உள்ள வேற்றுமை புரிந்தது.
“உன் சம்பளம் எவ்வளோ?”
”இருநூறு ரூபாய்” என பொருமையாக கூறினான்
“என்கூட வரியா …………. இதைவிட நிறையா வாங்கலாம்”
“முடியாது அம்மாவையும் தம்பியையும் விட்டு வர முடியாது” அவன் முகத்தில் மழலை ஊஞ்சலாடியது.
வாலிபன் மனதில் ஏதோ பிசைந்தது. சிறுவனுக்கு இருக்கும் பொருப்பு தனக்கு இல்லாமல் போனதே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது.
“நீங்க வர மாட்டிங்க நானே வைத்தியரை கூடிட்டு வரேன்” என்று அந்த வாலிபன் மறுத்தும் காதில் வாங்காமல் ஒடினான் வீரா.
சிறிது நேரத்தில் வைத்தியருடன் வந்தான் வீரா. வைத்தியர் வைத்தியம் பார்த்து வாலிபனுக்கு கட்டுப் போட்டார். வீரா என்ற மருந்தால் வாலிபன் மனதும் சிகிச்சை பெற்றது.
வாலிபன் வீராவுக்கு தற்போதைக்கு தன் நிலை தெரியவேண்டாம் என நினைத்தான் “நீ போ நான் வைத்தியரோடு போறேன் ……….. கேட்க மறந்துட்டேன் உன் பேர் என்ன?”
“வீரா ……… உங்க பேரு”
“கண்ணன்”
“இல்ல……. திருடன்னு சொல்லுங்க”
விக்கித்துப் போனான் கண்ணன்
“ஆமாம் ………… கண்ணன் வெண்ணைய திருடினான் அதனால திருடன்தானே” எனக் கூறிப் பெரிதாகக் கைதட்டிச் சிரித்தான் வீரா. கண்ணனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
“வீரா நீ எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கே …… ரொம்ப நன்றி” என வாஞ்சையுடன் அவன் தலையை தடவியவாறு கேட்டான்
“சரி சரி என்கூட வாங்க என் வீட்டுக்கு போகலாம்?”
”கண்டிப்பா வருவேன் ஆனா மூணு மாசம் கழிச்சி ………….”
வீரா முழித்தவாறு “ஏன் முணு மாசம் ………….”
”அது அப்படிதான் ………. நீ இப்ப போ அம்மா உனக்காக காத்திருப்பாங்க”
அரைமனதோடு வீரா சென்றான்
வீரா போனதும் “வைத்தியரே உங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் … அப்படியே என்னை போலீஸ் ஸ்டேஷன் கூடிட்டு போக முடியுமா நடக்க முடியல?”
தவறான முறையில் சம்பாதித்த கண்ணனின் முதல் சம்பளம் கடைசி சம்பளமானது.