தமிழில் பிழையின்றி எழுதிட 01 - திரு விஜய் நரசிம்மன்

தமிழில் எழுதும் பொழுது பொதுவாக ஏற்படும் பிழைகளைக் தவிர்ப்பதற்கு கேட்ட கேள்விக்குப் பதிலா திரு விஜய் நரசிம்மன், அளித்த பதில்:


நான் அறிந்த வரையில் பொதுவாக ளகர/லகர, றகர/ரகர, ணகர/னகர பிழைகள் நிறைய வரும். அடிப்படையில் டகர ளகர ணகரங்கள் தொடர்புடையவை (கிட்டத்தட்ட ஒரே ஒலியின் வெவ்வேறு பரிணாமங்கள்) என்று உணர்ந்துகொள்ளுதல் ஓரளவிற்கு உதவும். எடுத்துக்காட்டாய், ‘கண்டான்’ என்ற சொல்லில், ‘ட்’ என்பதற்கு முன் ‘ண்’ மட்டுமே வரும், ‘ன்’ வராது. அது போலவே ‘ள்’/’ண்’ புணர்ச்சியில் ‘ட்’ ஆக மாறும் [கண்+து = கண்டு] இதே போல றகரமும் னகரமும் இனமானவை (’ன்’ மெய்க்கு முன் ‘ற்’ மெய்யே வரும், ‘ர்’ வராது: ’கன்று’ - ’கன்ரு’ அல்ல!) இப்படியே லகர ளகரமும் (ஆனால், நிறைய லகர/ளகர, றகர/ரகர வேறுபாடுகள் பொருள் குறித்தே வரும், இச்சொற்களை நினைவில் கொள்வதன் மூலம் பிழையை தவிர்க்கலாம்... பள்ளி/பல்லி, வெள்ளம்/வெல்லம்)

சொற்களில் இவை வரும் வகையை (pattern) கவனிப்பதன் மூலம் இவற்றைத் தெளிவாய் உணரலாம்...

அடுத்தபடியாக அதிகம் வருவது வல்லினமிகும் மிகா இடங்கள் (எனக்கு அதிகமாக தொல்லை கொடுத்த ஒன்று இதுதான்! இன்னும் முழுமையாய் கற்ற பாடில்லை!)

நான் அடிப்படையில் சில விதிகளை மட்டும் மனத்தில் கொண்டிருக்கிறேன் (இவை விதிவிலக்கில்லாதவை, எனவே எளிமையானவை, சில வல்லின விதிகள் பொருள் வேறுபாட்டால் வருபவை, கொஞ்சம் கடினம்!)

இரண்டாம் நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப் பிறகு வல்லினம் வந்தால் மிகும். அதாவது ‘ஐ’ (2ம் வேற்றுமை) மற்றும் ‘கு’ (4ம் வேற்றுமை) பின் க்/ச்/த்/ப் வந்தால் அவை இரட்டிக்கும்: அவனை”க்” கண்டேன், அவனுக்கு”க்” கொடுத்தேன். (வல்லினமான டகரமும் றகரமும் சொல்லின் முதலில் வராது!)

அகர இகர ஈற்று வினையெச்சங்களுக்குப் பிறகு வல்லினம் மிகும்: சொல்ல’ச்’ சொன்னான், கூட்டி’ச்’ சென்றான்.

உகர ஈற்று வினையெச்சமாக இருந்தால், அது வன்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் வல்லினம் மிகும், இல்லையேல் மிகாது: எடுத்து’க்’ கொடுத்தான் (எடுத்து என்பது உகரவீற்று வினையெச்சம், இதில் ‘து’ என்ற குற்றியலுகரத்திற்கு முன் ‘த்’ என்ற வல்லெழுத்து உள்ளது, இது வன்தொடர் குற்றியலுகரம், எனவே வல்லினம் மிகும்!)

கொண்டு சென்றான் (இது மெந்தொடர் குற்றியலுகர உகரவீற்று வினையெச்சம். ‘டு’ என்ற குற்றியலுகரத்திற்கு முன்னால் ‘ண்’ என்ற மெல்லினம் உள்ளது! எனவே வல்லினம் மிகாது!)

இதெல்லாம் வேணானுதான ஒரு மென்பொருள் கேட்கிறேன்... மறுபடி இதேவே :-) உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ கேக்குது நண்பா, இருந்தாலும் ஒரு கணினி சொல்லி நாம் தெரிஞ்சுக்குறதவிட நாமளே தெரிஞ்சுக்குறது சிறந்ததுங்கறது என் பணிவான எண்ணம்... தொடங்கிட்டா ஆழமா போறது எளிது :-

இந்த தளம் ஓரளவுக்கு உதவும்... "dev dot neechalkaran dot com / naavi dot html" ('dot' என்பதற்கு ‘.’ இட்டுக்கொள்ளவும்)
இதில் முக்கியமாக வல்லினமிகுதி, மரபுப் பிழைகளைக் கண்டறியலாம்
--------- விஜய் நரசிம்மன்.
==========================================================

எழுதியவர் : திரு விஜய் நரசிம்மன். (9-Mar-15, 5:46 pm)
பார்வை : 482

மேலே