திகில்காரன்

அலவாங்குப் போட்டு அதிகாலை நெம்பி
பலமுறை கூப்பி எழுப்ப – விலகாத
தூக்கம் கலைக்க மறுத்தே வெறுப்பேற்றி
மூர்க்கமாய் செய்வான் அடம்!
படிபடி என்றால் படியான்.துடிப்பாய்
படிப்பான் அவனாய் ஒருநாள்.- விடியும்
வரைக்கும்.அதுஅவன் பரீட்சை காலம்
விரைவதைக் காட்டும் விதம்.
பேனைக்கு மைநிறப்பி பென்சில்கள் கூர்செய்து
சேனைக்குச் சேரும் சுறுசுறுப்பாய் –மேனி
மினுக்கி மிரளவைக்கும் பரீட்சைக் காலம்
தினுசாய் கொடுப்பான் திகில்.
புத்தகம் தொட்டுப் படிக்காமல் எப்படியோ
மொத்தமாய் புள்ளிகள் வாங்குதலில் – வித்தகனாய்
சத்தமின்றி சாதிக்கும் என்சமர்த்துப் பிள்ளைக்கு
முத்தம் வழங்குவாள் தாய்.
மெய்யன் நடராஜ்